
(எம்.ஆர்.எம்.வஸீம்)
நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சிரேஷ்ட வாக்களிப்பு மத்திய நிலைய அதிகாரிகள் 10 பேர் அந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நுவரெலியாவில் வைத்து இன்று (04) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
குறித்த அதிகாரிகள் அரசியல் கட்சி ஒன்றில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு மத்திய நிலைய சிரேஷ்ட அதிகாரிகள் 10 பேர் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவர்களுக்கு பதிலாக வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 10 அதிகாரிகளும் குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்து புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான தகவல்கள் பல கிடைத்ததற்கமைய அவர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தோம்.
தேர்தல் கடமைகளில் இருந்து இவ்வாறு நீக்கப்பட்டவர்கள். வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட உறுப்பினர்களாவர். இவர்கள் 10 பேரும் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களாகும்.
அத்துடன் நாளை இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தலுக்காக நுவரேலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பானவர்கள் ஊடாக இன்று காலை வாக்கு சீட்டுகளும், வாக்குபெட்டிகளும் பாதுகாப்பான முறையில் அனுப்பவைக்கப்பட்டன.
அதேபோல் 95 வாக்கெண்ணும் நிலையங்களும் உள்ளன. 6 ஆம் திகதி காலை முதல் நான்கு தொகுதிகளிலும் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்.
வாக்களிப்பு பணிகளுக்காக 4 ஆயிரம் அரச அதிகாரிகளும், வாக்கெண்ணும் பணிகளுக்காக 2 ஆயிரம் அரச அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 1500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் விதி முறைமீறல்கள் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. சிறு அளவிலான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றவையே அவையாகும். பாரியளவில் எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை.
அதேவேளை நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவை ஆகஸ்ட் 6 ஆம் திகதி பகல் 1 மணிக்கும், விருப்பு வாக்கு விபரத்தை இரவு எழு மணியளவிலும் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment