விருப்பு வாக்கு முறைமைக்குப் பதிலாக தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையை கோருகின்றோம் - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

விருப்பு வாக்கு முறைமைக்குப் பதிலாக தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையை கோருகின்றோம் - ரணில் விக்கிரமசிங்க

இவ்வருடத்தில் அரசியல் தீர்வு ...
(நா.தனுஜா)

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஊடாக மாத்திரமே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்த முடியும். அதனையே நாம் பாதுகாப்பதற்கு முற்படுகின்றோம் என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை மக்கள் அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறியதாவது சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தால் மாத்திரமே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்த முடியும். அதனையே நாம் பாதுகாப்பதற்கு முற்படுகின்றோம். அதேபோன்று இப்போது வேட்பாளர்களை விடவும் கட்சிகள் இருக்கின்றன. ஆகவேதான் இந்த விருப்பு வாக்கு முறைமைக்குப் பதிலாக தொகுதிவாரி பிரதிநிதித்துவமுறை மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை ஆகியவற்றின் கலப்பின் அடிப்படையிலான தேர்தல் முறைமையைப் பரிந்துரை செய்கின்றோம்.

எதிர்வரும் பாராளுமன்றத்தில் இது குறித்து ஒரு இறுதி இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என்று நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனவே விருப்புவாக்கு முறைமையின் அடிப்படையில் நடைபெறுகின்ற இறுதித் தேர்தல் இதுவா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தேர்தலில் விருப்புவாக்கு முறைமை தொடர்ந்தும் காணப்படும். எனினும் நாம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையின் கலப்பு முறைமை ஒன்றையே கோருகின்றோம்.

ஏனெனில் அதனை நடத்துவதும் மிகவும் இலகுவானதாகும். மிகப்பாரியளவிலான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை. இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களின் ஊடாக பிரசார விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ள முடியும். எனவே எதிர்காலத்தில் கலப்பு முறையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன். 

கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் இது பற்றி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய இரு கட்சிகளும் கலப்பு முறைமைக்கு உடன்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறிய கட்சிகள் மறுப்பைத் தெரிவித்திருந்தன.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலான கொரோனா வைரஸ் பரவலுக்கு எமது நாடும் முகங்கொடுத்திருக்கிறது. அந்த நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான யோசனைகளையும் செயற்திட்டங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே முன்வைத்திருக்கிறது. 

ஆகவே இவற்றைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். அரசாங்கம் அமைக்கத்தக்க அளவில் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுத்தருமாறுதான் நாம் கோருகின்றோமே தவிர, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை என்றார்.

No comments:

Post a Comment