தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் - வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் - வேலுகுமார்

திட்டமிட்டு அழிக்கப்பட்ட ...
"கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக தமிழ் பேசும் சமூகமாக ஓரணியில் திரண்டு வாக்களித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும்." என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட வேலுகுமார் இம்முறை வரலாற்று வெற்றியை நிலைநாட்டினார். அதாவது கண்டி மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, "மிகவும் நெருக்கடியான அதேபோல் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே இம்முறை பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தோம். எதிரணி வேட்பாளரான எனக்கு எதிராக ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தீவிரமாக செயற்பட்டது. 

அதுமட்டுமல்ல திட்டமிட்ட அடிப்படையில் சதிகார அரசியலும் முன்னெடுக்கப்பட்டது. பிரச்சாரங்கள் ஓய்ந்து இறுதிக்கட்டத்தில்கூட சாக்கடை அரசியலுக்கே உரித்தான சில நடவடிக்கைகளை எனக்கு எதிராக முன்னெடுத்திருந்தனர். சமூகவலைத்தளங்களிலும் வதந்திகள் பரப்பட்டனர். மறுபுறத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் பேரினவாதிகளின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக சில வேட்பாளர்கள் தேசிய கட்சிகளில் அணிவகுத்து நின்றனர். 

இவ்வாறு மக்களை திசை திருப்புவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் என்மீது நம்பிக்கை வைத்து கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். கடந்த காலப்பகுதியில் என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனை கருதுகின்றேன்.

2015 ஆம் ஆண்டு மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் கண்டி மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களையும், அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்தேன். எனது மனசாட்சியின் பிரகாரம் சேவைகளில் திருப்தி இருந்தது. இதனால்தான் இம்முறை உரிமையுடன் வாக்கு கேட்டுவந்தேன். எனது மக்கள் சொந்தங்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, இனிவரும் காலப்பகுதியிலும் மக்களுக்கான எனது அரசியல் தொடரும். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பேன்." என்றார்.

No comments:

Post a Comment