
சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்திய வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூபா. 66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், தனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.
இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது.
அதில், தனி உச்ச நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த தீர்ப்பினை அவர்கள் உறுதி செய்தனர். இதனால், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் ரூபா. 1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரே இருந்த 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் என கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூபா. 300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்நடவடிக்கை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment