வெளிநாடுகளில் தொழில் புரிய வீசா பெற்றுக் கொடுப்பதாக 60 மில்லியன் ரூபா நிதி மோசடி : சிக்கினர் இளம் தம்பதியினர் ! - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

வெளிநாடுகளில் தொழில் புரிய வீசா பெற்றுக் கொடுப்பதாக 60 மில்லியன் ரூபா நிதி மோசடி : சிக்கினர் இளம் தம்பதியினர் !

SL finance company exposed in NZ visa scam - Adaderana Biz English | Sri  Lanka Business News
(செ.தேன்மொழி)

வெளிநாடுகளில் தொழில் புரிவதற்கான வீசா அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து 60 மில்லியனுக்கும் அதிகாமான நிதியை மோசடி செய்தமை தொடர்பில் இளம் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் மற்றும் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது வெளிநாடுகளில் சென்று தொழில் புரிவதற்கான வீசாவைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவ்வாறான விளம்பரங்களை வெளியிட்டு நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில அறிவு மற்றும் கணணி அறிவில் தேர்ச்சி பெற்றவர்களான இவர்கள், மிக திட்டமிட்ட முறையில் இந்த மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதற்கமைய 60 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இவர்கள் மோசடி செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கனடா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் போன்ற ஐரோப்பா நாடுகளிலும், கொரியாவிலும் தொழில் புரிவதற்கான வீசாவை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறு வீசாவை பெற்றுக் கொள்வதற்காக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடமிருந்தே இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீசாவை பெற்றுக் கொள்வதற்காக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களின் கடவுச்சீட்டின் பிரதியை அனுப்புமாறு குறிப்பிட்டு, சில தினங்களின் பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் சுய விபரங்கள், அடையாள அட்டையின் பிரதி மற்றும் தொலைபேசி இலக்கம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர்.

பின்னர் அந்த விண்ணப்பதாரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவரது வங்கி கணக்கில் இரண்டு மில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்டு அதனை, உறுதிப்படுத்தும் வகையில் அந்த ஆவணங்களையும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அவர் இந்த விபரங்களை அனுப்பிய பின்னரே இந்த மோசடிகள் செயற்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய விண்ணப்பதாரியின் அடையாள அட்டை இலக்கத்தை கொண்டு சிம் அட்டை தொலைந்து விட்டது என்று தெரிவித்து அதே தொலைபேசி இலக்கத்தை கொண்ட புதியதொரு சிம் அட்டையை வழங்குமாறும் கேட்டுக் கொண்டு சிம் அட்டை வழங்கும் நிறுவனத்திடமிருந்து அதனை பெற்றுக் கொள்கின்றனர்.

அவ்வாறு சிம் அட்டை கிடைக்கப் பெற்றவுடனே வங்கியை தொடர்பு கொண்டு, தனது விபரங்களை தெரிவித்து தான் வைப்பிலிட்டுள்ள பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்றும், தனது ஏ.டீ.எம். அட்டையின் இரகசிய இலக்கம் மறந்து விட்டது என்று குறிப்பிட்டு வங்கியாளர்களின் கேள்விகளுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பதிலை வழங்கிய பின் இரகசிய இலக்கத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு இரகசிய இலக்கம் கிடைக்கப் பெறும் ஒருசில நிமிடங்களுக்குள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

சமூகத்தில் இதுபோன்ற பல மோசடிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதினால் மக்கள் இந்த விடயம் தொடர்பில் கவனமாக செயற்பட வேண்டும். இந்த மோசடிகள் தொடர்பில் இதுவரையில் 20 - 25 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது விரைவில் வீசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குறிப்பிடப்பட்ட தொகையையும் விட அதிகளவான தொகை பணத்தை சிலர் வைப்பிலிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குற்றப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , இந்த மோசடிகள் தொடர்பில் வங்கிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment