
(எம்.மனோசித்ரா)
சிறு பிள்ளைகளுடன் விளக்கமறியல் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள தாய்மார்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கிய அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த வாரம் கையளிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சிறைச்சாலைகளிலுள்ள தாய்மாரில் ஐவர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பதோடு ஏனையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை மூலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐவரில் இருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கும், விளக்கமறியலில் உள்ளோரை துரிதமாக பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
3 - 5 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுவதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக அவர்களது நெருக்கமான உறவினர்களிடம் ஒப்படைப்பது பொருத்தமானது என்பதினால் அதற்கான சட்ட வரைபை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
போதைப் பொருள் வியாபாரம் உள்ளிட்ட வெவ்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கின்ற தாய்மார்களின் 46 பிள்ளைகள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலுமுள்ள சிறைச்சாலைகளில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
அதனையடுத்து சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தாய்மாருடைய பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
பிள்ளைகளை விடுதலை செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளையிற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment