
(ஆர்.ராம்)
இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக தீர்மானித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நீண்ட காலமாக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளமையை கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலத்தால் சூட்சுமமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாது தனியே 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் விளைந்தால் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அதில் தலையீடுகளை செய்ய அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இந்திய தரப்பில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ராஜபக்ஷவினர் தலைமையிலான ஆட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்கள் ஆணை கிடைத்துள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளில் இந்தியா செல்வாக்குச் செலுத்த விளைவதானது பிறிதொரு நாட்டின் இறைமை மற்றும் உள்ளக விடயத்தில் தலையீடுகளை செய்வது போன்றாகிவிடும் என்ற கரிசனையை இந்தியா கொண்டிருக்கின்றது.
இந்த கரிசனை காரணமாக இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஆகக்குறைந்தது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான உள்ளடக்கத்தினையாவது புதிய அரசியலமைப்பிற்குள் உள்ளீர்ப்பது பற்றிய விடயத்தில் அதிக சிரத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் அதன் பின்னரும், 13 ஆவது, 19 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவது பற்றி அதிகளவு பேசப்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் 19 ஆவது நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபை முறைமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்களை செய்து வருகின்றன.
இத்தகையதொரு பின்னணியிலேயே தமிழ்த் தரப்பொன்றை சந்தித்த வேளையில் கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் மேற்கண்ட விடயம் சூட்சுமமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர்ஸ்தானிகர் - கூட்டமைப்பு சந்திப்பு
இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 21 ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் திட்டவட்டமாக கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாடாக இருக்கும் இலங்கையில் நிலையான சமாதனம், நல்லிணக்கம் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களை தொடர்ந்தும் வலியுறுத்துவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
2016ஆம் ஆண்டில்...
2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வெளிவிவகாரங்களுக்கான செயலாளராக விஜயம் செய்திருந்த இந்தியாவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது, சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாதுள்ளது. ஆகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்குவது தொடர்பில் இந்தியா ஏன் அழுத்தங்களை பிரயோக்காதிருக்கின்றது என்று கேள்வி எழுப்பியிருந்ததாக கூறினார்.
அதற்கு பதிலளித்திருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர், போர் நிறைவு உட்பட பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன. ஆகவே உடனடியாக நடைமுறைச் சாத்தியமான விடயங்களை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக வடக்கு கிழக்கு இணைப்பினை கைவிடுமாறு கூறவில்லை. அதனையும் பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரல் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment