வாசற்படி ஏறி வாக்குக் கேட்டு வருபவர்களுக்குத்தான் வெட்கமில்லை என்றால் எந்தக் கேள்விகளுமில்லாமல் வாக்குப் போட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் வெட்கமில்லையா? - கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் காட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 28, 2020

வாசற்படி ஏறி வாக்குக் கேட்டு வருபவர்களுக்குத்தான் வெட்கமில்லை என்றால் எந்தக் கேள்விகளுமில்லாமல் வாக்குப் போட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் வெட்கமில்லையா? - கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் காட்டம்

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

30 வருட காலம் தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கான அபிவிருத்திகள் எதையுமே செய்யாமல் இருந்து விட்டு தற்போது மீண்டும் வாசற்படி ஏறி வாக்குக் கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்குத்தான் வெட்கமில்லை என்றால் அவர்களிடம் எந்தக் கேள்விகளுமே கேட்காமல் வாக்குப் போட்டுக் கொண்டே இருக்கும் மக்களுக்கும்தான் வெட்கமில்லையா? என கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை 28.07.2020 இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் வகையில் ஆதரவாளர்கள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சில அரசியல்வாதிகளுக்கு கடந்த 30 வருட கால பொய்யும் புரட்டும் வாய்ப்பாடமாக உள்ளது. அதனை வைத்தே இப்பொழுதும் படம் காட்டுகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்படாமல் கடந்த 30 வருட காலமாக தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை அலங்கரித்த நாயகர்களும் இப்பொழுது களத்தில்தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் மக்களிடம் வந்து தனக்கும் விளங்காமல் கேட்டுக் கொண்டிருப்போருக்கும் விளங்காமல் தத்துவம் பேசி மக்களை மடையர்களாக்கி பலரை மூளைச் சலவை செய்து பின்னாலேயே சுற்றி வருவதற்கு செக்கு மாடுகளாய்ச் சிலரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எனவே இந்த சமூக விரோத அரசியல்வாதிகளைப் பற்றி மக்கள் நன்கு புரிந்து அவர்களை இனிமேல் உங்கள் வீட்டுப் படிகளையும் நாடாளுமன்றப் படிகளையும் மிதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதவாக்கறைகளான இவர்கள் உருப்படியாக இந்த சமூகத்திற்கு எதனைச் செய்தார்கள்? எத்தனை தொழிற்சாலைகளை அமைத்து உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழில்களை வழங்கினார்கள்.

குறைந்தபட்சம் ஒரு நாடாளுமன்ற காலமான 5 வருடங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி இருந்தாலும் இப்பொழுது கடந்த 30 வருட காத்தில் 6 தொழிற்சாலைகளை அமைத்திருக்கலாம்.

அவ்வாறு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் முயற்சித்திருந்தாலே மட்டக்களப்பில் இப்பொழுது 30 தொழிற்சாலைகள் இயங்கும். அவற்றில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பளித்திருக்கலாம்.

எல்லாவற்றையும் செய்வோம் என்று சொல்லி நாடாளுமன்றத்துக்குச் சென்ற நாயகர்கள் எதையுமே மக்களுக்குச் செய்யாமல் கொந்தராத்தின் மூலம் பணம்பெற்று அதைக் கொண்டு மாடமாளிகைகள் அமைத்ததும் தோட்டந்துரவுகள் வாங்கியதும் வெளிநாடுகசளில் முதலீடு செய்ததும்தான் நடந்திருக்கின்றன.

இதனை மக்கள் உணர்ந்து இந்த ஊருக்கு உதவாத உதவாக்கறைகளை இம்முறை நாடாளுமன்றம் செல்ல விடாமல் விரட்டியடிக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad