சிறுவர் துஷ்ப்பிரயோகத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையுடன் பாதுகாப்பு அமைச்சு ஒன்றிணைவு - பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

சிறுவர் துஷ்ப்பிரயோகத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையுடன் பாதுகாப்பு அமைச்சு ஒன்றிணைவு - பாதுகாப்புச் செயலாளர்

"அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும்" என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து இன்றைய தினம் (27) பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்த விஷேட கூட்டத்திலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு பாடசாலை மட்டத்தில் விஷேட விழிப்புணர்வு குழுக்ககள் ஏற்னவே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துரதிஷ்டவசமாக, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆகியவற்றை எடுக்க வேண்டிய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளில் சிலர், அவற்றில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தமை அனைவரும் அறிந்த உண்மையாகும். இவ்வாறு செயற்பட்ட பொலிஸ் போதை தடுப்பு பிரிவின் அதிகாரிகள் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கான அபராதங்கள் மற்றும் தண்டனைகளை கடுமையானதானதாக மாற்றியமைக்கும் வகையில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தற்போது அமுலில் உள்ள சட்டங்கள் மிகவும் மென்மையானதாக காணப்படுவதால் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு நியாயமான தண்டனைகள் வழங்க முடியாமல் உள்ளன.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான 50ஆம் இலக்க சட்டம் 1998ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2019 மே வரை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை உருவாக்குவதற்கான முயற்சிகள் தாமதமாகவே இடம்பெற்றன.

இந்நிலையில், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஐந்து ஆண்டுத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான தொழில்நுட்ப குழு ஒன்றை அமைப்பதை நோக்கமாக கொண்டே இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டம், தேசிய நடைமுறைப்படுத்தல் குழுவின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், நீதி, சமூக நலன்புரி, தொழில், சுற்றுலா மற்றும் ஊடக அமைச்சுக்கள் பங்குதாரர்களாக இணைந்து செயற்பட்டு இத்திட்டத்தை அமுல் படுத்த வேண்டும்.

பொலிசார் ஊடாக உரிய நேரத்தில் சட்டத்தை அமுல் படுத்தல், பாதுகாப்பான சூழல் மற்றும் சிறுவர் நேயம் ஆகிய மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 47,177 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929க்கு வருடாந்தம் சராசரியாக 550,000 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித்த விதானபத்திரன, அதன் பிரதித் தலைவரும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சுஜாதா அலஹப்பெரும, அதன் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன ஆகியோர் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment