(செ.தேன்மொழி)
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் சர்ச்சைக்குரிய கருத்து மற்றும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண நிகழ்வுகளில் தொற்று நீக்க சட்ட விதிகள் மீறப்பட்டமை ஆகியவற்றைப் பொருட்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை, நாட்டின் சட்டம் அதிகாரமுள்ளவர்களுக்கு பக்கச்சார்பாக செயற்படுவதையே வெளிப்படுத்துகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, தற்போது பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு மூன்று மாதகாலமே கடந்துள்ள போதிலும், பிரதான இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
இன்று மக்களுடன் நாம் சந்திப்புகளை மேற்கொள்ளும் போது மொட்டுக் கட்சிக்கும், தொலைபேசிக்கும் இடையிலேயே பிரதான போட்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அடுத்து ஆட்சியமைக்க முடியும் என்ற எண்ணம் எமக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாசவின் மீது அச்சம் எழுந்துள்ளது. அதனால் அவர் எப்போதுமே சஜித் தொடர்பிலே சிந்தித்து வருகின்றார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு உரை நிகழ்த்தி முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் சர்ச்சைக்குறிய கருத்து மற்றும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண நிகழ்வு சம்பவங்கள் தொடர்பிலும் பொருட்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படுபவர். இவர் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் தான் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக செயற்பட்ட போது 2000 - 3000 இராணுவ வீரர்களை ஒரே இரவில் கொலைச் செய்ததாக கூறியிருந்தார். இவர் கூறிய இந்த சம்பவம் உண்மை என்பதை அனைவரும் அறிவார்கள்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க போதியளவான சாட்சிகள் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. தற்போது கருணாவே வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இதனால் அவருக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள இது ஒரு ஆதாரமாகவுள்ளது.
இந்த ஆதாரத்தை கொண்டு கொலை குற்றத்தின் கீழ் கருணா அம்மானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கமுடியும். இவ்வாறான ஏற்பாடுகள் காணப்படும் போது சட்டக்கல்வி பயின்றவரான மஹிந்த ராஜபக்ஷ அதனை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறுவது நியாயமற்றதாகும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தொற்று நீக்க சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியில் தொற்று நீக்க சட்ட விதிகளை மீறி செயற்பட்டதாக ஆயிரக்கணக்காண சாதாரண மக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.
ஆனால் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண நிகழ்வில் இந்த சட்ட விதிகள் உரிய முறையில் கடைபிடிக்கப்பட வில்லை. அதனையும் பொருட்படுத்த வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனூடாக நாட்டின் சட்டமானது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் ஒருவகையிலும், சாதாரண மக்களுக்கு இன்னொரு வகையிலுமே செயற்படும் என்பதையே அவர் கூற முற்பட்டுள்ளார் போன்று எமக்கு தோன்றுகின்றது என்றார்.
No comments:
Post a Comment