தமிழர்களின் வீரத்தைக்கண்டு பீதியடைந்தோர் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடுமென தற்போது அறிக்கை விடுகின்றனர் - துரைராசா ரவிகரன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

தமிழர்களின் வீரத்தைக்கண்டு பீதியடைந்தோர் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடுமென தற்போது அறிக்கை விடுகின்றனர் - துரைராசா ரவிகரன்

TamilMirror.lk
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழர்களின் வீரத்தினைக் கண்டு பீதியடைந்திருந்தவர்கள், தற்போது வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பலவாறாக அறிக்கைகளையும், கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர். அவ்வாறு இரத்த ஆறு ஓடும் என எம்மாலும் கருத்துக்களைத் தெரிவிக்க முடியுமென முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் சமஷ்டியைக் கோரினால் வட கிழக்கில் இரத்த ஆறு ஓடும் எனவும், தமிழர்கள் சமஷ்டி கோருவது தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு மற்றும் வியாக்கியானங்களை குப்பையில் போடுமாறும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச் செலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் சில தினங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் 22.07.2020 இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தேரர்களின் இத்தகைய பேச்சுத் தொடர்பில், கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் யாரும் இவ்வாறான அறிக்கைகளையோ, கருத்துக்களையோ வெளியிடுவதில்லை. ஏன் எனில் தமிழர்களின் வீரத்தைப் பார்த்து அனைவரும் பீதியடைந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கும் சில பௌத்த பிக்குக்கள் மனநோயாளிகளாக இருக்க வேண்டும். அல்லது சில சிங்கள அரசியல் தலைவர்களின் தூண்டுதலில்தான் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என எண்ணுகின்றேன்.

எங்களுடைய சமயத் தலைவர்கள இவ்வாறு அபத்தமாக பேசுவதில்லை. மதத்திற்குரிய மரியாதை, பண்புதான் அங்கே வெளிப்படுத்தப்படுகின்றது. ஆனால் பௌத்த பிக்குகள் சிலர் பௌத்தத்திற்கு தலை குனிவை ஏற்படுத்துகின்றனர். பௌத்த சமயத் துறவிகள் சிலர் மாத்திரமே இப்படியான அபத்தமான பேச்சுக்களை பேசுகின்றனர்.

குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்களுள் ஒருவரான விக்கிரமபாகு கருனாரத்ன, தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். சில பௌத்தத் துறவிகளும் இதே கருத்துப்பட ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்கள்.

அரசாங்கம் மற்றும் அரசு தலைவர்கள் இவ்வாறு வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்ற கருத்தைத் தெரிவிப்பவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் எப்படியும் பேசலாம் என்றிருந்தால், நாமும் இவ்வாறு பேச வேண்டி ஏற்படும். இரத்த ஆறு ஓடும் என்று எம்மால் கூற முடியாதா? 2009 இற்கு முன்னர் தமிழனின் வீரத்தினை இந்த உலகே அறிந்திருந்தது.

மேலும் தமிழர்கள் சமஷ்டிக்காக போராடுவது சட்ட ரீதியாகத் தவறல்ல. அதற்கு அப்பால் அப்படி சமஷ்டி கேட்டுப் போராடுவதற்கு, ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில் தமிழர்களுக்கு உரிமையுண்டு என்பதுடன் சமஷ்டி பிரிவினையைக் குறிக்கவில்லை என உயர் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பினையும், வியாக்கியானங்களையும் குப்பையில் போடுங்கள் என்பது மனநோயின் உச்சகட்டமாகும். எனவே தமிழ் மக்களாகிய எம் அனைவரது உரிமைக் குரல்களும், எதிர்வரும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதற்கு நாம் எமது வாக்குகளால், எமக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை, பாராளுமன்றிற்கு அனுப்பி வைக்க வேண்டும் - என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad