'ராஜபக்ஷக்களிடமிருந்து தாய் நாட்டைப் பாதுகாக்கும் போராட்டம் ஓயாது' : சம்பிக்க சூளுரை..! - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

'ராஜபக்ஷக்களிடமிருந்து தாய் நாட்டைப் பாதுகாக்கும் போராட்டம் ஓயாது' : சம்பிக்க சூளுரை..!

ராஜபக்க்ஷக்களிடமிருந்து தாய் ...
(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தி ராஜபக்ஷக்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளும் பழைய எதிர்கட்சி அல்ல. தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் ராஜபக்ஷக்களிடமிருந்து தாய் நாட்டைப் பாதுகாக்கும் வரை ஓயாத போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

குருணாகலில் அமைக்கப்பட்டிருந்த புவனேகபாகு மன்னனுடைய அரச சபை உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லப்டன் சுற்று வட்டாரத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், குருணாகலில் காணப்பட்ட புவனேகபாகு மன்னனுடைய அரச சபை உடைக்கப்பட்டமையானது, அரச பரம்பரைக்கு ராஜபக்ஷக்கள் ஏற்படுத்தியுள்ள அவமானமாகும். இது குருணாகல் நகர சபைத் தலைவருடையதோ அல்லது ஜோன் பெர்னாண்டோவினுடையதோ செயற்பாடு அல்ல. கலாசார பாரம்பரிய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

மேலும், தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்தலொன்றை வழங்கியிருந்த போதிலும் பொலிஸார் அந்த அறிவித்தலை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். மீண்டும் இதனை மீள் திருத்தியமைப்பதாகக்கூறி குற்றத்தை மறைக்க முடியாது.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கினால் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும். எனவே எமது நாட்டின் தேசிய உரிமையைப் பாதுகாப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம். ஜனாதிபதித் தேர்தலின் போது பாரிய பொய்களைக் கூறி ஆட்சியைக் கைப்பற்றி இந்த அரசாங்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்காக ராஜபக்ஷக்களுக்கு எதிரான எமது போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

அதேபோன்று யுத்தத்தால் அங்கவீனமுற்றுள்ள இராணுவ வீரர்களுக்காகவும் பொலிஸாருக்காவும் போராடுவோம். தற்போது பொலிஸ் துறை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு கொழும்பிலுள்ள முக்கிய இடங்களை விற்றல் உள்ளிட்ட அரசாங்கத்தின் தேசத்துரோக செயற்பாடுகளுக்கு எதிராக நாம் போராடுவோம்.

இது ராஜபக்ஷக்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளும் பழைய எதிர்க்கட்சி அல்ல. புதிய பலமாகும். இதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ராஜபக்ஷக்களிடமிருந்து தாய் நாட்டை பாதுகாக்கும் வரையில் இந்த போராட்டத்தை இடை விடாது முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad