
(இராஜதுரை ஹஷான்)
40 வருடங்கள் அமைச்சரவையில் பலமிக்க அமைச்சு பதவிகளை வகித்த மலையக அரசியல்வாதிகள் செய்யாத பல சேவைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கரை ஆண்டு காலப்பகுதிக்குள் செய்துள்ளது. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பகல் கனவு கண்டவர்களினால் மலையகத்துக்கு எவ்வித அபிவிருத்தியும், முன்னெடுக்கப்படவில்லை. உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் தெரிவித்தார்.
கொழும்பில் பணி புரியும் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மலையகம் தொடர்பில் புதியக் கனவுகளை நாம் காணவில்லை. நாம் கண்ட கனவுகள் கணிசமானவையை நிறைவேற்றி இருக்கிறோம்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல், அமரர் ஆறுமுகன் தொண்டமான் வரையில் 40 வருடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் வெறும் கனவுகளை மாத்திரம் கண்டார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் வெறும் நான்கரை வருடங்களே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தோம். இந்த நான்கு வருடங்களில் 40 வருடங்களுக்கு ஈடு செய்யும் விதத்தில் மலையகத்தில் அபிவிருத்தியும் எமது மக்களுக்கு சேவையும் முன்னெடுக்கப்பட்டது.
மலையகத்தில் தமிழ் கிராமங்களை அமைத்தல், பிரதேச சபைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல அபிவிருத்திகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுத்துள்ளது.
சிறிகொத்தாவை பிடிப்பதே எமது இலக்கு என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் எங்களது இலக்கு அலரி மாளிகையை பிடிப்பதே. எங்களின் இலக்கு.
மலையகத்தில் நிலையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு பலமான ஆதரவு அவசியம். மலையக மக்கள் சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுப்பார்கள் என்றார்.
No comments:
Post a Comment