தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ள அரசியல் முகவர்கள் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ள அரசியல் முகவர்கள் - இராதாகிருஷ்ணன்

மலையகத்தில் புதிதாக போட்டியிடும் சிலர் அரசியல் முகவர்கள். தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

லிந்துலையில் நேற்று (01.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "மொட்டு கட்சியில் மூன்று சிங்கள வேட்பாளர்களும், 8 தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். எனவே, சிங்கள மக்களின் வாக்குகள் மேற்படி மூவருக்குமே சென்றடையும்.

தமிழ் வாக்குகள் உடையும். எனவே, தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறுவது கஷ்டம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் முற்போக்கு கூட்டணி மூன்று தமிழ் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. அந்த மூவரும் வெற்றிபெறுவது உறுதி.

அதேபோல் இந்த தேர்தலில் அரசியல் முகவர்கள், ஒப்பந்தக்காரர்களாக சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். திகாம்பரம் பக்கம் இருந்த ஒருவர் இறுதிநேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம்தாவி, ரணிலின் முகவராக போட்டியிடுகின்றார்.

அடுத்தது அனுசா அமேஷ்வரன். சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணிக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மலையக மக்கள் முன்னணி எம்வசமே உள்ளது.

சுயேட்சையாக போட்டியிடுபவர்களால் வெற்றிபெறமுடியாது என்பதே யதார்த்தம். அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராகவே அனுசா போட்டியிடுகின்றார்.

ஜனாதிபதியின் ஒப்பந்தக்காரராக தம்பி ஒருவர் போட்டியிடுகின்றார். இந்த மூன்று பேரும் தமிழ் வாக்குகளை உடைக்கும் முகவர்கள். ஒருவருக்கு தலா இரண்டுகோடி, மூன்றுகோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. அதனை வைத்தே பிஸ்கட்டுகளையும், அரிசிகளையும் வழங்கி வருகின்றனர்.

ஆசைவார்த்தைகளைக்காட்டலாம். பல வாக்குறுதிகளை வழங்கலாம். எனவே, அவர்களை நம்பக்கூடாது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை வழங்குங்கள்." - என்றார்.

மலையக நிருபர்

No comments:

Post a Comment