
(செ.தேன்மொழி)
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லாத போது அதனை மறைப்பதற்காக, தமது வேலைத்திட்டங்கள் மீது விமர்சனங்களை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா, இது போன்ற செயற்பாடுகளை நிறுத்திவிட்டு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அரசாங்கத்தை முன்வைக்குமாறும் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை. நாங்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தாலும் அதனை விமர்சித்து வருகின்றார்கள். அப்படி என்றால் அவர்களது திட்டத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
2019 ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் வரி அறவீட்டின் மூலம் 575 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப் பெற்றது. ஆனால் இவ்வருடத்தின் ஆரம்ப ஏழு மாதங்களில் வரி அறவீட்டின் மூலம் 408 பில்லியன் ரூபாய் வருமானமே கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய அரசாங்கத்தின் முறையற்ற வரிச் சலுகையினால் இதுவரையில் மாத்திரம் 150 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பந்துல குணவர்தன அவருடன் விவாதத்தில் ஈடுபடுமாறு எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருடன் விவாதத்தில் ஈடுபடுவதற்கு எப்போது என்றாலும் நான் தயாராகவே இருக்கின்றேன். அதனால் ஊடகச் சந்திப்புகளை ஏற்படுத்தி விவாதத்தில் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுக்காது, பொருளாதாரம் எவ்வளவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இதேவேளை ஆளும் தரப்பினர் கடந்த அரசாங்கம் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். ஆம் கடன் பெற்றுக் கொண்டுள்ளோம். எமது ஆட்சிக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் கடனை செலுத்துவதற்காகவே நாங்கள் கடனை பெற்றுக் கொண்டிருந்தோம். அதற்கமைய 5,600 பில்லியன் ரூபாய் கடன் பெற்றிருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் முதல் ஏழு மாதத்திற்குள் 1000 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐந்து வருடத்திற்கே நாங்கள் 5,600 பில்லியன் ரூபாய் கடனையே பெற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் ஏழு மாதத்திற்கு மாத்திரம் இவர்கள் 1000 பில்லியன் ரூபாய் கடனை பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சர்வதேசத்தில் பெற்றுக் கொண்டுள்ள கடன்களை செலுத்துவதற்கு வழமையாக பின்பற்றப்பட்டு வந்த தாரான முறையை தற்போது பின்பற்ற முடியாமல் போயுள்ளது. அதாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு ஒரு பில்லியன் டொலரை செலுத்த வேண்டியிருந்தால், அதனை சர்வதேசத்திடமிருந்தே பெற்றுக் கொண்டு செலுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்தது. தற்போது இதுவும் இல்லாமல் போயுள்ளது.
இதேவேளை சுயாதீன அரசாங்கம் ஒன்று சர்வதேசத்திடம் கடன் பெறும் போது தனது நாட்டின் சொத்தையோ வளத்தையோ பிணையாக வைக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தற்போது அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
கேள்வி : நாட்டின் பொருளாதாரம் மறை ஆறு வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றீர்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?
பதில் : ஆம், இதனை நான் கூறவில்லை, ஆசிய அபிவிருந்தி வங்கியின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எமக்கு தேவை இதனை மறை ஒன்று அல்லது பூச்சியம் என்ற அளவுக்கு குறைக்கவே. அதற்காக நாங்கள் ஆட்சியில் இருந்தால் நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்க்கட்சியிலிருந்தாலும் அது தொடர்பில் அரசாங்கத்திற்கு உதவிகளை பெற்றுக் கொடுப்போம். காரணம் நாங்கள் நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் செயற்படும் நபர்கள். இதேவேளை நாங்கள் அம்புலஸ்ஸை அனுப்பும் போது, நீங்கள் எந்த கட்சியினர்? என்று கேட்பத்தில்லை.
கேள்வி : கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றதே?
பதில் : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாத்திரம் பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சியடையவில்லை. இது தொடர்பில் வைரஸ் பரவல் சிறியளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு பிரதான காரணம் அரசாங்கத்தின் முறையற்ற வரிச் சலுகை ஆகும். பொருட்களின் விலையை குறைப்பதற்காக வரி குறைப்பு செய்ததாக அரசாங்கம் தெரிவித்தாலும், பொருட்களின் விலை குறைந்ததா?
கேள்வி : வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஏதாவது வழிமுறை இருக்கின்றதா?
பதில் : அதற்கான தீர்வு இருக்கின்றது. முதலில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகையை நீக்க வேண்டும். கடந்த காலத்தில் வரி எவ்வாறு அறவிடப்பட்டதோ அந்த நிலைமைக்கே கொண்டுவர வேண்டும். இதேவேளை தேசிய உற்பத்தியை அதிகரிக்குமாறு கூறிக்கொண்டு நாட்டைச் சுற்றி மதில் அமைத்து வைப்பதால் வீழ்சியடைந்துள்ள பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்ய முடியாது. நாம் நாட்டுக்கு வெளியில் பாலங்களை அமைப்பதன் ஊடாகவே பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.
No comments:
Post a Comment