எம்.சி.சி. ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்பதை அமெரிக்காவிற்கு தெரிவிக்கவுள்ளோம், ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பற்றி கருத்துரைப்பதில் எவ்வித பயனுமில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

எம்.சி.சி. ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்பதை அமெரிக்காவிற்கு தெரிவிக்கவுள்ளோம், ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பற்றி கருத்துரைப்பதில் எவ்வித பயனுமில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளினால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு தெரிவிக்கவுள்ளதாகக் கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச மட்டத்திலான ஒப்பந்தங்களை செய்துகொள்ளும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதனாலேயே எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு குழுவை நியமித்து அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.

முல்கிரிகல பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். 

பிரதமர் மேலும் கூறுகையில், கடந்த ஐந்து வருட காலத்தில் நான் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகள் திசைதிருப்பி விடப்பட்டன. இதற்கு பிரதான காரணம் இரண்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். அரசியல் பழிவாங்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் 2 வருட காலத்திற்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட்டு அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் விதமாக நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம் எங்களை அவமதிப்பதாக கருதி விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக மாற்றியமைத்தது. இதன் தாக்கத்தை மக்களே எதிர் கொண்டார்கள்.

30 வருட கால யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் அங்கு துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. கடந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திகளை அரசியல் காரணிகளினால் இடை நிறுத்தியது. இடை நிறுத்தம் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பொதுத் தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதியின் கொள்கைளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போயுள்ளது. மக்களின் ஆணையினை பெற்றுக் கொள்வதற்கு இவரிடம் எவ்வித கொள்கையும் கிடையாது. மக்களையும். நாட்டையும் நேசிக்கும் தரப்பினரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சஜித் பிரேமதாஸ பற்றி தொடர்பில் கருத்துரைப்பதில் எவ்வித பயனும் கிடையாது. ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம் தோற்றம் பெறுவது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தார்கள். அத்தீர்மானம் பொதுத் தேர்தலிலும் தொடர வேண்டும்.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இடைநடுவில் ஒரு தரப்பினர் விலக முடியாது. ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு மீளாய்வு குழுவை நியமித்தோம். தற்போது அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தகைகள் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் ஒப்பந்தத்தை நிராகரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளோம். இதனை அமெரிக்க எம்.சி.சி. நிறுவனத்திற்கும் தெரிவிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment