அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த போகங்களின்போது அதிக அறுவடை கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இடமளிக்கக்கூடாதென விவசாயிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று (05) முற்பகல் பொலன்னறுவை சிறிபுர பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அழிவுக்குள்ளாகியிருந்த அரிசி களஞ்சியங்களை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புனர்நிர்மாணம் செய்வதற்கும் நெல்லை முறையாக கொள்வனவு செய்வதற்கும் முறைமையொன்றை தயாரித்ததாகவும் ஜனாதிபதி விவசாயிகளிடம் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாத்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மத்திய வங்கி மோசடிக்கு வகைகூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை பிரதேசவாசிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
தொழில் பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பன பொலன்னறுவை மாவட்டத்தில் அநேக பிரதேசங்களில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும். அதற்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேசவாசிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் வேட்பாளர் ஜகத் சமர விக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஜயசிங்க பண்டா மஹியங்கனை பொலன்னறுவை வீதியில் கலுகெலே பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
மன்னம்பிட்டிய பிரதிபா மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேசத்தின் மகாசங்கத்தினர் முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர். ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி பிரித் பாராயணம் இடம்பெற்றது.
பிரதிபா மண்டபத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த சில ஆசிரியர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, கதுருவல பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றினார். பிரதேசத்தில் உள்ள குளங்களை புனரமைத்து தருமாறு அங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். விதை நெல் மற்றும் உரப் பிரச்சினை குறித்தும் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தம்பாலை கல்வல சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களுடனும் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பொன்று பொலன்னறுவை தீப உயனவுக்கு முன்னால் இடம்பெற்றது. அந்நிகழ்விலும் ஜனாதிபதி வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment