குற்றச் செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நேற்றுமுன்தினம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிளாஸ்ரிக் செய்யப்பட்ட குண்டு 2, கரும்புலி நாள் கொடி 1, தொலைபேசி 1, மடிக்கணினி 1, டொங்குள் 1, பென்மெரா 1, சிடி 1 ஆகியன மீட்கப்பட்டன.
வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தருடன் கைது செய்யப்பட்ட ஆசிரியையான குறித்த பெண் சட்ட ரீதியற்ற முறையில் திருமண வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணையே குற்ற செயலிற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் முன்னாள் போராளி எனவும், அவர் ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்கத்தவராக செயற்பட்டு வந்ததாகவும் பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றத் தடுப்பு பிரிவு, பொலிசார், புலனாய்வு பிரிவு ஆகியன தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment