
(எம்.மனோசித்ரா)
வெற்றியைத் தாண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையே எமது இலக்காகும். எமது இந்த வெற்றிப் பயணத்தின்போது ஐக்கிய தேசிய கட்சியினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஆதரவாளர்கள் பலர் எம்முடன் இணையவுள்ளனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.
கேகாலை நகரில் இன்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கட்சி, இன, மத பேதம் இன்றி அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். தற்போது ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிரிந்து மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றனர்.
குண்டு வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள் சஜித் பிரேமதாசவுடன் இருக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசும் சஜித் பிரேமதாச குண்டு தாக்குதல்தாரிகளுக்கு ஆதரவளித்தவர்களுடனேயே இருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் 14 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாச பொதுத் தேர்தலில் 25 இலட்சம் வாக்கு வித்தியாசயத்தில் படுதோல்வியடைவார். எனவே நாட்டு நலன் பற்றி சிந்தப்பவர்கள் அனைவரையும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கணிப்பிடும் போது கேகாலை மாவட்டத்திலிருந்து ஏழு உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும். அதற்கு இந்த மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களது வாக்குகள் பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்.
தேர்தலின் பின்னர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், விவசாய பொருளாதாரம், பெண்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் என்பன முன்னெடுக்கப்படும். ஐந்து வருட ஆட்சி நிறைவடைந்ததன் பின்னர் வறுமை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும் என்றார்.
No comments:
Post a Comment