
மலையக மக்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தனவே வாக்குரிமை வழங்கினார். அதன் பின்னர் எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வாக்குரிமையை பெற்றுக் கொடுத்தேன். எனவே, மலையக மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எமக்கு உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சினிசிட்டா மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 1972 ஆம் ஆண்டு முதல் நுவரெலியாவில் நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு எனக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஜே.ஆர். ஜயவர்தன, காமினி திஸாநாயக்க போன்றோர் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கீழ் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சௌமியமூர்த்தி தொண்டமானும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ரணசிங்க பிரேமதாசவும் நுவரெலியாவுக்கு வீடுகளை வழங்கினார்.
நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுத்தேன். ஆசிரியர்களையும் வழங்கினேன். ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
நான் பிரதமரான பின்னர் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. 2000 காலப்பகுதியில் ஆறுமுகன் தொண்டமான் எம்முடன் இருந்தார்.
பெருந்தோட்டப் பகுதியில் இருந்த பலருக்கு வாக்கு உரிமை இருக்கவில்லை. தோட்ட முகாமையாளரின் அனுமதி தேவைப்பட்டது. ஒரு சத்தியக் கடதாசி ஊடாக இந்நிலைமையை மாற்றியமைத்தேன். இதனால் சுமார் 2, 3 லட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்தது.
ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் நிறைய பேருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. குடியுரிமையும் வழங்கப்பட்டது. எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வழங்கினேன்.
2015 இல் பெருந்தோட்டத் துறையை கட்டியழுப்புவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் மோடியை ஹட்டனுக்கு அழைத்து வந்தேன். வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன.
25 தமிழ்ப் பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகள்கூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கம்பெரலிய திட்டம் ஊடாகவும் அபிவிருத்திகள் நடந்தன. அதேபோல சிங்கள கிராமங்களும் மேம்படுத்தப்பட்டன.
அதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவிவருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பரிசோதனைகளையும் நடத்தவில்லை. தோட்டப் பகுதிகளில் கொரோனா பரவினால் என்ன நடக்கும். எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளையாவது நடத்துங்கள் என்றார்.
மலையக நிருபர் கிரிஷாந்தன்
No comments:
Post a Comment