பசிலுக்கு எதிராக சதித்திட்டம் என்பது ஆளும் கட்சியின் பொய்ப் பிரசாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்காமலிருப்பது சிறந்ததாகும் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

பசிலுக்கு எதிராக சதித்திட்டம் என்பது ஆளும் கட்சியின் பொய்ப் பிரசாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்காமலிருப்பது சிறந்ததாகும் - விஜித ஹேரத்

வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு வேன் ...
(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகின்றமை பொய்யாகும். இவ்வாறு பொய்யான கருத்துக்களைக் கூறி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மறுபுறம் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் ஆளுங்கட்சி முயற்சிக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த அரசாங்கங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் அதனை பயன்படுத்தி நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட்ட போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்டது. பொருளாதாரம், மக்களின் பாதுகாப்பு, ஊழல் மோசடிகளை ஒழித்தல், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் போன்ற எதனையுமே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

இதேபோன்று 2010 இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்டது. ஆனால், பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததா ? கடன் சுமையும் குறையவில்லை. ஜனநாயகம், ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற மூன்றில் இரண்டு பலத்தை குடும்ப அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு பயன்படுத்தினாரே அன்றி நாட்டுக்கு சேவை செய்வதற்காக அல்ல.

எனவே, இம்முறை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. கடந்த 8 மாத காலத்திற்குள் இந்த அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இயலாமையுடைய அரசாங்கத்திற்கு மக்கள் மீண்டும் ஆதரவளிக்கப்போவதில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல சாதாரண பெரும்பான்மையைக் கூட இம்முறை மக்கள் வழங்கப்போவதில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை கொண்டு செல்ல முடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்காமலிருப்பது சிறந்ததாகும்.

பெரும்பான்மை இல்லாவிட்டால்தான் ஆளுந்தரப்பு எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தமக்கு அதீத பலம் இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரும்.

தற்போது சில சதித்திட்டங்கள் பற்றி பேசப்படுகிறது. கடந்த வருடத்தில் நாமல் குமார என்ற நபர் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் பொய் கூறி மக்களை ஏமாற்றினர். தற்போது, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சதித்திட்டம் இடம்பெறுவதாக லக்ஷ்மன் யாப்பா கூறுகின்றார். இதன் மூலம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பசில் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது.

இவ்வாறாக பொய்யான தகவல்களைக் கூறி அதன் மூலம் ஒருபுறம் வாக்குகளைப் பெறுவதற்கும் மறுபுறம் அரச வாகனங்களை உபயோகிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் முயற்சிக்கப்படுகின்றதே தவிர, இதில் எந்த உண்மையும் கிடையாது.

இதற்கு சிறந்த உதாரணம் நாமல் குமார என்ற நபரது விவகாரமாகும். தற்போது அவர் தொடர்பில் எந்த பேச்சும் இல்லை. தேர்தலின் போது மாத்திரமே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படும். எவ்வாறிருப்பினும் மக்கள் இதற்கு ஏமாறக் கூடாது என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment