வாழைச்சேனை கடதாசி ஆலையை போன்று எம்பிலிபிட்டி கடதாசி ஆலை விரைவில் புத்துயிர் பெறும் - அமைச்சர் விமல் வீரவன்ச - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

வாழைச்சேனை கடதாசி ஆலையை போன்று எம்பிலிபிட்டி கடதாசி ஆலை விரைவில் புத்துயிர் பெறும் - அமைச்சர் விமல் வீரவன்ச

எவரும் நம்பாத வகையில் மிக மோசமான நிலையிலிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தது போன்று எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையும் எதிர்வரும் மாதங்களில் புத்துயிர் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலைக்கு நேற்றுமுன்தினம் திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு நிலைமையை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தேசிய கடதாசி நிறுவனத்துக்குச் சொந்தமான தற்போது மூடப்பட்டுக் கிடக்கும் எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

எவரும் நம்ப முடியாத வகையில் மிக மோசமான நிலையில் காணப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்து விட்டே நான் இங்கு வந்துள்ளேன். 

வாழைச்சேனை கடதாசி ஆலையில் இம்மாத நடுப்பகுதியில் 50 தொன் கடதாசி உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகிக்கப்படும். வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்க வைப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். 

நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் மீண்டும் புதிதாக பெற வேண்டிய நிலையே அங்கு காணப்பட்டது. அனைத்து கட்டடங்களையும் மீள புனரமைப்பு செய்தோம். 

அதோடு ஒப்பிடுகையில் எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலை மிக பாதுகாப்பாக உள்ளது. இங்கு இயந்திராதிகள் பழுதடையாத நிலையில் சிறப்பாக உள்ளன. மின் இணைப்புகள் உட்பட்ட உபகரணங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. அதனை சீர்படுத்தி மிக விரைவில் இங்கு கடுதாசி உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad