பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு சுமந்திரனால் இடிக்கப்படுகிறது - பொ. ஐங்கரநேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு சுமந்திரனால் இடிக்கப்படுகிறது - பொ. ஐங்கரநேசன்

வாக்குகளைச் சிதறடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு, எம்.ஏ. சுமந்திரனால் இன்று இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இதன் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (05) கோண்டாவிலில் இடம்பெற்றபோதே முதன்மை வேட்பாளரான பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தான், தங்களை உருவாக்கியதாக கூட்டமைப்பினரே சொல்லி வருகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதும் கூட்டமைப்பு படிப்படியாகத் தன்னைப் புலி ஆதரவு நீக்கம் செய்ததோடு, தமிழ்த் தேசிய நீக்கத்தையும் செய்துவருகிறது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது தமிழினப் படுகொலையே என்று உலக நாடுகளின் பல தலைவர்களும் கூறிவரும் நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இனப்படுகொலை நடைபெறவில்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவே செயற்பட்டார்.

இவர்களே போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையையே இல்லாமல் செய்கின்ற அரசாங்கத்தின் சூழ்ச்சி நிரலுக்கு அமைவாகத் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிக் கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்து அரசாங்கத்தைப் பிணை எடுத்தார்கள். இவையே கூட்டமைப்பின் கூடாரம் இன்று காலியாகிக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் ஆகும்.

இப்போது தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைத் தொடர்வதற்கு மீண்டும் தங்களுக்கு ஆணை வழங்குமாறு, கடந்த தேர்தல்களின் போது பாடிய அதே பல்லவியை மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் ஆணை கேட்பது காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காகவோ அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காகவேர் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் வகித்து வந்த நிழல் அமைச்சர்கள் பதவிகளை மீண்டும் பெறுவதற்காகவே ஆணை கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்கள் இந்தப் போலித்தேசியவாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment