“சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது” - மூதூரில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 26, 2020

“சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது” - மூதூரில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இனவாதிகளை ஒழிக்க சஜித்தை ஆதரிக்க ...
தற்போது சரிந்து போயுள்ள வாக்குகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்கான திட்டமுடனேயே, முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபடுத்தி, பலிக்கடாவாக்கும் முயற்சிகளில் கடும்போக்குவாதிகள் ஈடுபட்டு வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, நேற்று மாலை (25) மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது, “நமது சமூகத்துக்கு இது ஒரு இக்கட்டான காலகட்டம். தற்போதைய சூழ்நிலை கருதி நாம் பிரிந்துவிடாமல், ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே, இனவாதிகளின் திட்டங்களை முறியடிக்க முடியும். நமது சமூகம் சார்ந்த ஒருசிலர் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடுகிறார்கள். அவர்களைத் துதிபாடுகிறார்கள். இந்தப் பிரதேசங்களுக்கு வந்து, மக்களை பீதிக்குள்ளாகி வாக்குத் தேட முயற்சிக்கின்றனர். அரசுக்கு வாக்களிக்காவிட்டால், இந்த நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியாதென அச்சுறுத்துவதோடு, எதிர்காலம் சூனியமாகிவிடும் என எச்சரிக்கின்றனர். தேசியப்பட்டியலுக்காகவும், பதவிகளுக்காகவும், கொந்தராத்துக்களுக்காகவுமே இவர்கள் இவ்வாறு அலைந்துதிரிகின்றனர்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, நாங்கள் அரசிடம் நீதி வேண்டி நின்றோம். அந்த முயற்சிகள் எதுவும் கைகூடாத பட்சத்தில், அரசுக்காக பரிந்துபேசும், தற்போது வாக்குக் கேட்க அலைந்துகொண்டிருக்கும் ஏஜெண்டுகளிடம், இந்த விடயத்தை அரசிடம் எடுத்துக்கூறுமாறு சொன்னோம். மேன்மட்டத்துடன் பேசி, ஜனாஸா எரிக்கும் விவகாரத்தை ஆராய்ந்து, தீர்த்து வைக்கும் வகையில், நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கு முயற்சி செய்யுமாறு வேண்டினோம். ஆனால், இற்றைவரை அது நடைபெறவுமில்லை, இவர்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவுமில்ல.

இதற்குக் கூட வக்கில்லாத இந்த ஏஜெண்டுகள், இப்போது அவர்களுக்காக வாக்குக் கேட்பதும், மேடைகளிலே வெட்டிக் கதை பேசுவதும் கேவலமானது. எங்களை மோசமாக ஏசுகின்றார்கள். நாங்கள்தான் தவறு செய்ததாக மக்களிடம் காட்ட முயற்சிக்கின்றார்கள். சமூகத்துக்காக நாங்கள் பாடுபட்டமை, அவர்கள் பார்வையிலே குற்றமாகவும் பிழையாகவும் தெரிகின்றது.

திருட்டுத்தனமான ஆட்சிக்கு ஆதரவளித்து, சட்டவிரோத அரசை நிறுவுவதற்கு ஒத்துழைக்காததே, அவர்களது பார்வையிலே நாங்கள் செய்த பிழை. ஜனநாயகத்தைப் பேணி, அரசியலமைப்பை பாதுகாத்த ஜனநாயக சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைமையை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து, குற்றங்களை சோடித்து, சிறையில் அடைப்பதற்கு துடியாய்த் துடிக்கின்றார்கள். இப்படியான துன்பகரமான சூழ்நிலையிலேயே நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

புதிய பாராளுமன்றில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறித்தெடுப்பதே அவர்களின் இலக்கு. அதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது. தேர்தல் சட்டத்தை திருத்துதல். அரசியலமைப்பை தமக்கு ஏற்றாற்போல் வளைத்து எடுத்தல். முஸ்லிம் திருமணச் சட்டம், வக்புச் சட்டங்களை ஒழித்தல். சிறுபான்மையினருக்கு நன்மைபயக்கும் பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை இல்லாமலாக்கல். கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தல். இவைகள் மூலம் சிறுபான்மைச் சமூகத்தின் முதுகிலே அடிமைச்சாசனம் எழுதுவதே அவர்களின் எதிர்கால இலக்கு.

எனவே, எம்மைப் போன்றவர்களை வீழ்த்தினால், பாராளுமன்றத்தில் சமூகப் அநீதிகளை தட்டிக்கேட்க ஆளில்லாது போகுமென திட்டம் போடுகின்றனர். எமக்குத் துன்பத்தை தருவதன் மூலம், இந்த அரசியலிலிருந்து நாங்களாகவே ஒதுங்கிவிடுவோமென நினைக்கின்றனர்.

எனவே, எதிர்வரும் பாராளுமன்றில் அப்துல்லாஹ் மஹ்ரூப் போன்றவர்கள் சமூகத்துக்காகப் பணியாற்றுவதற்கு, உங்கள் வாக்குகளை அவருக்கு வழங்கி, அவரை தெரிவு செய்யுங்கள்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment