201 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

201 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா, பறையன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகாடு பகுதியில் ரூபா 2 கோடி பெறுமதியான 201 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) காலை 7.10 மணியளவில் மதவாச்சி - மன்னார் வீதியில் வைத்து குறித்த கஞ்சா தொகுதியை மீட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், லொறியொன்றிற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

லொறியின் உடலானது அலுமினியம் தகட்டினால் மூடப்பட்டு, அதன் உட்பகுதியில் உள்ள எஞ்சிய உடல் பகுதியில் திறக்கப்படக் கூடிய மூடியொன்றினால், திருகாணியினால் இறுக்கப்பட்ட இரகசிய கூடமொன்றினுள், 4 கோணிகளில் வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 87 பொதிகளில் குறித்த கஞ்சா தொகுதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர், 22 வயதான, பருத்தித்துறை, புலோலி வடக்கு, ஊரியவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மதவாச்சிக்கு பயணித்த சிறிய ரக லொறி ஒன்றிலேயே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்றையதினம் (02) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment