நாட்டினுள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரா விட்டால், கொவிட்-19 இரண்டாவது அலை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு எச்சரித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக இருந்ததை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 8,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிடம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள், வைத்தியசாலைகளிலுள்ள நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மூலமாக, இரண்டாவது அலை அபாயம் பரவக்கூடிய சாத்தியமான வழிகளாக காணப்படுகின்றன, சுகாதார மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவது, விமான நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும், ஏனெனில் இது இரண்டாவது அலை அபாயத்திற்கு வழிவகுக்கும் எனவும், சுகாதார மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் சுகாதார வழிகாட்டல்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்கள் மற்றும் கடற்படையினர் இடையே மாத்திரம் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நிலை காணப்படுவதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படா விட்டால், இரண்டாவது அலை பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொவிட்-19 நோயாளர்கள் 10 மில்லியனை தாண்டியுள்ளதோடு, கொவிட்-19 தொற்றினால் 500,000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment