(செ.தேன்மொழி)
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கிழக்கு மாகாண வேட்பாளருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், ஜாதிக்க ஹெல உறுமய அமைப்பின் தேசிய அமைப்பாளருமான நிசந்த ஸ்ரீ வர்ணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தேசப்பற்றாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆளும் தரப்பினர் கருணா அம்மானின் பிரசாரம் தொடர்பான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவதுடன், அவரது பிரசாரத்திற்கெதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் கிழக்கில் தேர்தல் பிரசாரத்தின்போது தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்ட காலத்தில் ஒரே இரவில் 2000, 3000 இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருமுறை தனக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுத்ததாகவும், மூன்றாவது தடவையாக அவர் அழைப்பு விடுத்த போது தான் இம்முறை தேர்தலில் போட்டியிடப்போவதாக அவரிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக இவ்வாறு அவர் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நிலைப்பாடு தொடர்பில் அவர் தெரியப்படுத்த வேண்டும்.
தேசப்பற்றாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆளும் தரப்பினர். கருணா அம்மானின் கருத்து தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள். ராஜபக்ஷாக்கள் தாங்களே யுத்தத்தை வெற்றி கொண்டதாக பெருமிதம் கொண்டாலும் ஆரம்பத்தில் அவர்கள் யுத்தம் நடத்துவதற்கு விரும்பவில்லை, கிழக்கில் சிங்கள கிராமங்கள் அழிக்கப்பட்ட போது, இராணுவத்தினர் கொலை செய்யப்பட்ட போதும், அரந்தலாவையில் பிக்குகள் கொல்லப்பட்ட போதும் அமைதியாகவே இருந்தனர்.
அத்துரலிய ரத்தினதேரர், அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோரும் ஜாதிக்க ஹெல உறுமய அமைப்பைச் சேர்ந்த நாங்களுமே யுத்தத்தை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
இதன்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நாங்கள் யுத்தத்தை வெற்றி கொள்வதற்கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது என்றும் அதற்கமைய செயற்படுவோம் என்றும் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இவர்கள் மறைமுகமாக விடுதலை புலிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வந்தனர். தற்போது இவற்றை மறைத்து விட்டு தாங்கள் தேசப்பற்றாளர்கள் என்றும், சிங்கள பௌத்த மக்களின் ஆதரவாளர்கள் என்றும் காண்பித்து வருகின்றனர்.
இவர்களே மக்களின் நிதியிலிருந்து விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்களான நகுலன், கே.பி, குமரன் பத்மநாதன் ஆகியோருக்கு ஊதியம் வழங்கியவர்கள். இன்று இராணுவத்தினரை கொன்று குவித்ததாக பிரசாரம் செய்துவரும் கருணா போன்றோருக்கும் தமது கட்சியில் கூட்டணி அமைக்க இடம்கொடுத்துள்ளார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபயவின் வெற்றிக்காக முன்னின்று செயற்பட்ட அத்துரலியே ரத்தின தேரர், கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு தேசியப்பட்டியலில் இடங்கொடுக்காதவர்கள். கருணா அம்பானுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான தேவை என்ன? மக்கள் இந்த விடயம் தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
கருணாவின் கருத்து தொடர்பில் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மாநாயக்க தேரர்கள் அவர்களது கருத்தை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்த்தர்களை வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்தது போன்று மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனையும் நாட்டுக்கு அழைத்து வருவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
தேர்தல் காலங்களிலே தங்களை சிங்கள பௌத்தர் என்றும், இராணுவத்தினர் மீது அக்கறை கொண்டவர்கள் என்றும் காட்டிக்கொள்ளும் இவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் நடந்து கொள்ளும் விதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கருணா அம்மானின் கருத்து யுத்தத்தின் போது தனது உயிரைத் தியாகம் செய்த இராணுவத்தினரின் குடும்பத்திற்கும், அவயங்களை தியாகம் செய்த இராணுவத்தினருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த கருத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை இந்த கருத்து தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment