(செ.தேன்மொழி)
2015 ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்ததைப் போன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கோத்தாபயவின் அரசாங்கத்தை அமைதிகாக்கச் செய்து சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமித்து சாதாரண மக்களே நாட்டை ஆளும் தகுதிவுடையவர்கள் என்பதை மீண்டும் உறுதி செய்வோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் வித்தானகே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏனைய அரசியல் தலைவர்களை போல் செயற்படாது முன்மாதிரியான முறையில் நாட்டை முன்னேற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர் மீது மக்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்து கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்திருந்தனர்.
ஆனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தற்போது தெளிவு பெற்றிருப்பார்கள். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் அவர்கள் மீதான நம்பிக்கையை உடைத் தெறிந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான செய்திகளையும் சூழ்ச்சியான முறையிலேயே வெளியிடுகின்றனர். மதிய நேரத்தில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும், இரவில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் விபரத்தை அறிவிக்கின்றனர்.
அரச ஊழியர்களின் ஊதியம் தொடர்பிலும் அரசாங்கம் தன்னிச்சையான முடிவையே எடுத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு அறிவிக்காமலே அவர்களது ஊதியத்தை அபகரித்துள்ளது.
பொதுத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த தீர்மானித்துள்ள நிலையிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது இவ்வாறு செயற்படுபவர்கள். தேர்தலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு எவ்வாறான நெருக்கடிகளை தோற்றுவிப்பார்கள் என்பது தொடர்பில் அரச ஊழியர்களே தீர்மானிக்க வேண்டும்.
எமது ஆட்சிக் காலத்தில் அரச ஊழியர்களின் நலனுக்காக நாங்கள் பாரிய சேவையாற்றியுள்ளோம். எதிர்காலத்திலும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னின்று செயற்படுவோம்.
நாட்டின் உற்பத்தியாளர்களுக்கு எவ்வாறான சலுகைகள் தற்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவிகள் வழங்கி வருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் எத்தனை பேருக்கு அது கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த செயற்திறன் அற்ற அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதல் வேலைத்திட்டமே, கல்கிஸ்ஸ கடற்கரையோர மணல் நிரப்பும் செயற்திட்டம், இதுவும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 890 பில்லியன் அரச நிதி வீணாக செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏதாவது கருத்து வெளியிட்டுள்ளாரா?
இவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தரப்பினரை பாதுகாக்கவும், அவர்களது பைகளை நிரப்புவது தொடர்பிலுமே அக்கறை செலுத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து மக்களுக்கு நன்மையளிக்கும் வேலைத்திட்டங்களை எதிர்பார்க்க முடியாது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை 2015 ஆம் ஆண்டு தோல்வியடையச் செய்ததைப் போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோத்தாபயவின் அரசாங்கத்தை அமைதிகாக்கச் செய்து சஜித் பிரேமதாசவை பிரதமாரக நியமித்து சாதாரண மக்களே இந்த நாட்டை ஆளும் தகுதிவுடையவர்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்வோம்.
No comments:
Post a Comment