மக்கள் பாதை தவறினாலும் இலட்சிய வழியில் நிற்பதே தலைமைக்கு அழகு - ஏ.எல்.எம்.அதாஉல்லா - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

மக்கள் பாதை தவறினாலும் இலட்சிய வழியில் நிற்பதே தலைமைக்கு அழகு - ஏ.எல்.எம்.அதாஉல்லா

அரசியல் தலைமை என்பது மக்களுக்குப் பின்னால் செல்வதல்ல, இலட்சியப் பாதையில் அவர்கள் மீளத் திரும்பும் வரை, துணிவுடன் நிற்பதே தலைமைக்கு அழகென, தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

முஸ்லிம் பிரதேச முக்கியஸ்தர்களை அழைத்து கலந்துரையாடியபோதே அதாஉல்லா இதனைத் தெரிவித்தார். "சமகால அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு" எனும் தொனிப்பொருளில் நடந்த கூட்டத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அமையப்போகும் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பங்காளர்களாக வேண்டும். உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் மக்கள் சில வேளைகளில் இலட்சியப் பாதைகளைத் தவறவிடலாம். இதற்காகத் தலைமைகளும் அவர்களுக்குப் பின்னால் செல்ல முடியாது. சரியகாத் ​தெளிவடையும் வரை மக்களை வழிகாட்டுவதுதான் தலைமைகளுக்கு அழகு. இவ்விடயத்தில் தனிமைப்பட நேர்ந்தாலும் தலைமைகள் துணிச்சலுடன் பணியாற்றி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.

அதிகாரங்களுக்காக அள்ளுண்டு செல்வது தலைமைக்கு அழகல்ல. இவ்வாறு அள்ளுண்டு சென்றதால்தான் முஸ்லிம் சமூகம் கடந்த ஆட்சியில் பல இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

ஒரு குடும்பத்தை மாத்திரம் ஒழித்துக் கட்டும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம், இன்று அக்குடும்பத்தையே ராஜபரம்பரைக்கு உரித்தாக்கியுள்ளது. 

தென்னிலங்கை சமூகத்தின் நம்பிக்கைகளை இனியாவது வெல்வது பற்றி இன்னும் சில தனித்துவ தலைமைகள் யோசிக்கவில்லை. இதுதான் இன்றுள்ள ஆபத்து. 

அமையப் போகும் அரசாங்கத்தில் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளதான செய்திகளை முஸ்லிம்கள் சொல்ல வேண்டிள்ளனர். கடந்த 52 நாள் அரசாங்கத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் எமது சமூகம் இன்று தனிமைப்பட நேர்ந்திருக்காது. இதில் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் தவறிழைத்து விட்டனர்.

தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள அரசாங்கத்துடன் பேசத் தயாரென சம்பந்தன், இப்போதே கூறத் தொடங்கியுள்ளார். சர்வதேசத்தின் அழுத்தத்துடனாவது, புதிய அரசாங்கத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இடமுண்டு. 

ஆனால் முஸ்லிம்களின் நிலைமைகள் கவலைக்கிடமாக இருப்பதற்கு நாம் இடமளிப்பதா? எனவே, தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டிய காலத்தேவைக்குள் முஸ்லிம் சமூகம் திணிக்கப்பட்டுள்ளதாகவே கருத முடிகிறது.

பெரியளவில் சர்வதேச ஆதரவுகள் இல்லாத எமது சமூகம் எவ்வாறாவது புதிய அரசாங்கத்துடன் இணைந்து, இசைந்து செல்வதுதான் எமது மக்களைப் பாதுகாக்கும்.

எனவே, ஆட்சியாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தேசிய காங்கிரஸைப் பலப்படுத்தி தென்னிலங்கை மக்களுக்கும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் புதிய செய்திகளைச் சொல்ல முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பலமான சக்தியாக தேசிய காங்கிரஸ் திகழ்வதற்கான சூழ்நிலைகள் பரவலாகத் தென்படுவதாகவும் அதாஉல்லா தெரிவித்தார்.

ராஜகிரிய நிருபர்

No comments:

Post a Comment