பெண்கள், சிறுவர்களுக்கு அவசியமான உதவிகள் பராமரிப்பை வழங்க கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு நிதி உதவி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

பெண்கள், சிறுவர்களுக்கு அவசியமான உதவிகள் பராமரிப்பை வழங்க கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு நிதி உதவி

(நா.தனுஜா)

இலங்கையில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அவசியமான உதவிகள் மற்றும் பராமரிப்பை வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் 400,000 கனேடிய டொலர்கள் நிதியுதவியை வழங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பெண்கள் மீதான குடும்ப வன்முறைச் சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வன்முறைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடியவாறான சேவைகளை பெண்கள் பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் உரிய பாதுகாப்பு சேவை வழங்கல்களை ஏற்படுத்துதல் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரிட்சு நக்ஸனிடம் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெகினொன் 400,000 கனேடிய டொலர் நிதியுதவியினை வழங்கியிருக்கிறார்.

இலங்கையின் சுகாதார அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வைத்தியசாலைகளில் குடும்ப வன்முறைகள் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசியமான சிகிச்சைகளை வழங்குவதற்கும், பராமரிப்பதற்குமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்நிதி செலவிடப்படவுள்ளது. 

அத்தோடு பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான ஊடக விளம்பரங்களை மேற்கொள்ளல், கர்ப்பிணிகளுக்கான மருத்துவ பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பெண்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக, பொருளாதார தாக்கங்களை ஆராய்தல் என்பவற்றுக்காகவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.

'கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டமையால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான அழுத்தம் ஒருபுறமிருக்க, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். 

எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பராமரிப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக்கு உதவத்தயாராக இருக்கிறோம்' என்று இந்நிதியுதவி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கினொன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment