நாடறிந்த உலமாக்களில் ஒருவரும், அஷ்-ஷைக் யூசுப் முப்தியின் தந்தையுமான, அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஹனீபா (பஹ்ஜி) இன்று (04) காலாமானார்.
அன்னாரது மரணம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஹனீபா (பஹ்ஜி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் இப்ராஹிம் இப்னு ஒமருலெப்பையின் புதல்வரும், நாடறிந்தஉலமாக்களில் ஒருவருமான அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஹனீபா (பஹ்ஜி) இன்று (04) வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கண்டி தஸ்கர ஹக்கானிய்யா அரபுக் கலாபீடத்தின் ஆயுட்கால தலைவராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்த இவர் தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காகச் செலவழித்தார்கள். இவர் பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்ததுடன் நடுநிலையானப் போக்கோடு இருந்துவந்தார்கள்.
அரசாங்கப் பாடசாலை ஆசிரியரான இவர் இலங்கையின் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்கள். தஸ்கர ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியுடன் பிணைந்து செயற்பட்ட இவர் இறுதிவரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கியப் பெருமை இவரைச் சாரும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment