அளுத்கம மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் : மூன்று பொலிஸார் பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

அளுத்கம மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் : மூன்று பொலிஸார் பணி நீக்கம்

கடந்த மே மாதம் 25ஆம் திகதி, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்காநகரில், மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுவன், தாரிக் அஹமட் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில், 3 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்றையதினம் (05) பிற்பகல் 5.00 மணியளவில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் மாலை 7.45 மணியளவில் வெளியிடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவித்தலில், குறித்த சம்பவம் தொடர்பில், வீதிச் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது பணியை உரிய முறையில் மேற்கொள்ள தவறியதாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் விசேட பணிக்காக, அளுத்கம பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த களுத்துறை பொலிஸ் பாடசாலையில் பணிபுரியும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும், அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணிபுரியம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் என மூன்று பேரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈவு, இரக்கமின்றி சட்டத்தை கையிலெடுத்து, மிகக் கொடூரமாக பொலிஸாரால் தாக்கப்பட்ட தாரிக் அஹமட் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

ட்விற்றர் தளத்தில் தாரிக் அஹமட் தொடர்பில் குரல் கொடுத்து வரும் சமூக வலைத்தள பயனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், #JusticeForThariq எனும் ஹேஷ்டேக் மூலம் குரல் கொடுத்து வருகின்றனர். குறித்த ஹேஷ்டேக் கொண்ட பல்லாயிரக்கணக்கான பதிவுகள் இடப்பட்டு வரும் நிலையில், அது தற்போது ட்ரெண்டிங் ஆகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று பிற்பகல் 5.00 மணியளவில் வெளியிட்டுள்ள அறிவித்தலில், கடந்த மே 25ஆம் திகதி அளுத்கம பொலிஸ் பிரிவில், மாலை 4.45 மணியளவில், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள அம்பகஹ சந்தியிலுள்ள வீதிச் சோதனைச் சாவடியில், துவிச்சக்கர வண்டியில் முகக் கவசம் இன்றி வந்த ஒருவரை, நிறுத்துமாறு பொலிஸாரால் சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.

அவர் பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து வெலிபன்ன திசையில் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் குறித்த வீதிச் சோதனைச் சாவடியின் ஊடாக தர்கா நகர் நோக்கிச் செல்ல முற்பட்டபோது, ​​அவரை நிறுத்துவதற்காக அவரது துவிச்சக்கர வண்டியை இழுத்துப் பிடித்து அவரை நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், அவர் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகே இருந்த மீன் பெட்டியொன்றின் மீது வீழ்ந்துள்ளார்.

இதன்போது, குறித்த நபர், சத்தமாக கத்தியவாறு அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், பொலிஸார் அவரைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு நபர், குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், துவிச்சக்கர வண்டியில் வந்தவரின் தந்தை தர்கா நகர், சென்ட்ரல் வீதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, பொலிஸார் குறித்த நபரின் தந்தையை வீதிச் சோதனைச் சாவடிக்கு அழைத்து, துவிச்சக்கர வண்டியில் வந்தவரை அளுத்கம பொலிஸ நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். துவிச்சக்கர வண்டியில் வந்தவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு நிலையில் தன்னிடம் எதுவும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக, அவரது தந்தை பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் தந்தையிடமிருந்து ஒரு வாக்குமூலத்தை பெற்ற பின்னர் குறித்த சிறுவனை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரினால் ஆரம்பத்தில் இந்நபர், மன வளர்ச்சி குறைவானவர் என அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, போதைப்பொருள் பயன்படுத்தி நபர் என சந்தேகநம் ஏற்பட்டிருந்தது. ஆயினும் தந்தையின் வாக்குமூலத்தை அடுத்து, குறித்த சிறுவனை தடுத்து வைக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்காமல் குறித்த சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டியில் வந்தவரைக் கட்டுப்படுத்த தேவையான பலம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரைத் தாக்கியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வெளிநபர்களால் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பல்வேறு பிரசாரங்கள் பரப்பப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் கடமையை மீறி செயற்பட்டுள்ளதா என விசாரிக்க களுத்தறை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் களுத்துறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் மேற்பார்வையில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுவனின் தந்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சிறுவனை, களுத்துறை நாகொட மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் மனநல வைத்திய அதிகாரி ஆகியோரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டள்ளதோடு, இதுவரை அது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை.

அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, கொழும்பு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், குறித்த பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment