(செ.தேன்மொழி)
அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே இனவாத ரீதியில் செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான், இதற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுவரும் எந்த குழுவிலும் தமிழரையோ, முஸ்லிம்களையோ அங்கத்துவராக நியமிக்கவில்லை என்றும் அரசாங்கம் அவர்களை புறக்கணித்தே வருகின்றது எனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலணி குறித்து அவரிடம் வினவியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே இனவாதத்துடனே செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபயவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் அவரது பதவியேற்பு தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அவ்வாறே அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருளியல் பாதுகாப்பு செயலணியில் மாத்திரமல்ல ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எந்த அணிகளிலுமே தமிழரோ முஸ்லிம்களோ உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இவர்கள் இன பேதத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் செறிவாக வாழ்ந்து வருகின்ற போதில் அவர்களுள் ஒருவரையாவது இணைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி அதனை கருத்திற் கொள்ளவில்லை. ஆரம்பத்திலிருந்தே இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் தொடர்ந்தும் தமிழரையும் முஸ்லிம்களையும் புறக்கணித்தே வருகின்றனர். இது கவலைக்குறிய விடயமாகும். இதனையே நாங்கள் பல தடவை தெரிவித்து வருகின்றோம்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தி அடிப்படை உரிமை மீறல் மனுவினூடாக அரசாங்கத்திற்கு உற்சாகம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தின் பழிவாங்கள் செயற்பாடுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே உள்வாங்கப்பட்டு வருகின்றனர். ரவி கருணாநாயக்கவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதும் அவர் மறைந்திருந்து பின்னர் மேன்முறையீடு செய்து தப்பித்துக் கொண்டுள்ளார். இதனூடாக யார் அரசாங்கத்திற்கு உற்சாகமளிக்கின்றனர் என்பது உறுதியாகின்றது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment