தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு, ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு அதனை விட முக்கியமானது : ஜே.வி.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு, ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு அதனை விட முக்கியமானது : ஜே.வி.பி

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தல் தொடர்பில் அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகக் காணப்பட்ட போதிலும், வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் நீதியானதும் அமைதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்தோடு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆணைக்குழு அறிவிக்கும் தினத்தில் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு அதனை விட முக்கியமானதாகும். மக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்த முடியாது. அத்தோடு தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களினதும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார். 

எனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு தேர்தலுக்கு முன்னர் செயற்பட வேண்டிய விதம், தேர்தலின் போது செயற்பட வேண்டிய முறை மற்றும் தேர்தலின் பின்னர் செயற்படக் கூடிய முறை என்பன பற்றி ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட வேண்டும்.

அத்தோடு பிரசார நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது, வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள், தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதா, அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்கெண்ணும் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும். 

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கமைய தேசிய மக்கள் சக்தியாக மக்கள் விடுதலை முன்னணி பொதுத் தேர்தலுக்குத் தயாராகும். 

தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டவுடன் நாம் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். பாராளுமன்றத் தேர்தல் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தலைமைத்துவம் வகிப்பதற்கு தயாராகவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment