(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொரானா தொற்று பரவுவது தொடர்பாக தற்போதைக்கு அபாயம் இருக்கும் இடமாக பொது போக்குவரத்து நிலையங்களை தெரிவிக்கலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொராேனா தொற்று பரவும் அபாய நிலை நாட்டில் குறைவடைந்து வருகின்றதை கருத்திற்கொண்டு அரசாங்கம் பொது போக்குரவத்தை வழமை நிலைக்கு கொண்டுவந்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொராேனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சுகாதார துறையின் அறிவுறுத்தலுக்கமைய பொது போக்குவரத்து சேவையை முற்றாக தடை செய்திருந்தது. பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 8 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களுக்குமான பொது போக்குவரத்து சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறையும் தற்போது இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது.
இருந்தபோதும் பயணிகள் போக்குவரத்து நிலையங்கள்தான் கொராேனா தொற்று தொடர்பாக இருக்கும் எச்சரிக்கையான இடங்கள்.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் மற்றும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடி இருக்கின்றோம்.
இதன் பிரகாரம் பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும்போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அளவாக மாத்திரம் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஏனெனில் பயணிகள் போக்குவரத்தின்போது மக்கள் நெருங்கிக்கொண்டு பயணிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இந்த தொற்று நோய் மீண்டும் பரவத் தொடங்கினால் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கின்றது.
அதனால் இது தொடர்பாக மக்கள் மிகவும் அவதானத்துடனே எப்போதும் செயற்பட வேண்டும். சுகாதாரத்துறையின் ஆலாேசனை மற்றும் வழிகாட்டல்களை பேணி நடப்பதன் மூலம் கொராேனா தொற்று பரவுவதை கட்டுப்பத்தலாம் என்றார்.

No comments:
Post a Comment