(எம்.எப்.எம்.பஸீர்)
பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி, மீள சேவையில் சேர முயற்சித்த விவகாரத்தில், அந்த போலி கையொப்ப கடிதத்தின் பின்னணியில் பிரதமர் அலுவலத்தில் சேவையாற்றும் நபர் ஒருவருக்கும் தொடர்புள்ளதாக சி.ஐ.டி. நேற்று கோட்டை நீதிமன்றுக்கு அறிவித்தது. அது தொடர்பில் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சி.ஐ.டி. நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியது.
ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்து, மீள தனது வேலையைப் பெற முயற்சித்ததாக கூறப்படும் குருணாகல், யந்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த பிரசன்ன அருண குமார எனும் நபர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.
இந்நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்த சி.ஐ.டி., 'இந்த சந்தேக நபர் இலங்கை வங்கியின் கடன் பிரிவிலேயே சேவையாற்றியுள்ளார். அதன்போது உரிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளாமல் மோசடியான முறையில் செயற்பட்டமைக்காக அவர் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த பின்னணியிலேயே மீள பணியில் சேர ஜனாதிபதியின் கையொப்பத்தை போலியாக இட்டு கடிதம் ஒன்றினை தயார் செய்துள்ளார். இந்நடவடிக்கைகளில் பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்து தற்போது விசாரித்து வருகின்றோம்.' என தெரிவித்தது.
அதன்படி சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.
முன்னதாக இலங்கை வங்கியின் தலைமைக் காரியாலயத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தலைவருக்கு கிடைக்கப் பெற்ற கடிதமொன்று தொடர்பிலே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது இலங்கை வங்கியிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த நபரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு சமமான கையொப்பம் இடப்பட்டிருந்துள்ளதுடன், அது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடித உறைக்கு சமமான உறையில் அடைக்கப்பட்டே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வங்கியின் தலைவரை சந்திக்குமுகமாக வருகைதந்திருந்த நபர்களுள் ஒருவரான சந்தேக நபரை அழைத்து விபரங்களை கேட்டபோது, அவர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கடிதத்தை போன்ற கடிதமொன்றை காண்பித்துள்ளார்.
இந்த கடிதம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து வங்கி அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை மோசடி தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் தனது சொந்த மடிக்கணனி மூலமே குறித்த பத்திரங்களை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குருணாகலையிலுள்ள சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மடிக்கணனி மற்றும் பென்ரைவ் ஒன்றினையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment