(செ.தேன்மொழி)
பொதுத் தேர்தர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இரத்து செய்தாலும், எமது எண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனாலே நாங்கள் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்தோம். அந்த மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இரத்து செய்திருந்தாலும் எமது எண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கம் மக்களின் உயிரிருக்கு என்ன அனர்த்தம் நேர்ந்தாலும் பரவாயில்லை பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நோக்கத்திலே செயற்பட்டது. வைரஸ் பரவலினால் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றிருந்த போதிலும் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்தது. இது சாத்தியமாகவில்லை என்பதினால் இம்மாதம் 20 ஆம் திகதி நடத்த தீர்மானித்திருந்தது.
கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனநாயக முறையிலான சாதாரண தேர்தலை நடத்துவதே எமது நோக்கமாகும். பொதுத் தேர்தலுக்காக நாங்கள் தயாராகி வருகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி நாங்கள் சட்டவிரோதமாக செயற்படுவதாக தெரிவித்து வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதியுடனே சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவே இதற்கு அனுமதி வழங்கி கைச்சாத்திட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பெருந்தொகையான அங்கத்துவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனே இணைந்து கொண்டுள்ளனர். எம்மிடமே பெரும்பான்மை இருக்கின்றது. பெரும்பான்மை ஆதரவு எங்கு இருக்கின்றதோ அங்கே ஜனநாயகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாங்களே ஜனநாயகத்திற்கமைய செயற்படுகின்றோம். தற்போது ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு சிறு பிரிவினரே, அவர்களுக்கு கட்சியில் உரிமைகோர முடியாது என்றார்.
No comments:
Post a Comment