நாம் எதிர்கொண்டுள்ள இந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியானது இம்மாவட்டத்தை வெற்றி கொள்வதற்கான அனைத்து வியூகங்களையும் செயற்படுத்தியும் எமது முயற்சிகளை மேற்கொண்டும் நாம் வெற்றியை அடைய வேண்டும். அதற்கான பல வியூகங்களை தயார்படுத்தி ஒவ்வொருவரும் ஆதரவாளர்களையும் சந்தித்து எமது வெற்றிக்கு வித்திடுவோம் என முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாரை மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பங்கேற்புடன் தேர்தல் குழுவின் தலைவர் யூ.எம்.வாஹிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற உள்ளக கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் செயற்பாடு வழமைக்கு மாற்றமாக இம்மாவட்டத்தின் அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட முதல் வெற்றியாளராக நசீரை தெரிவு செய்வதற்கான அதிக வாய்புள்ளதாக தெரிவித்தார்.
covid 19 உயிர் இழக்கும் எமது முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கும் விடயத்தில் இந்த அரசின் நடவடிக்கையில் குறைந்தபட்சமேனும் ஒரு மாற்றம் ஏற்படவும் இல்லை அதற்கான சமிக்ஞை கூட தென்படவுமில்லை. எனவே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எமது தாய் கட்சியான முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து எமக்கான உரிமை பெற்றெடுப்போம்.
நான் பட்டம் பதவிக்கு சோரம் போனவரில்லை. அந்த வகையில் நாம் ஒவ்வோருவரும் மரணத்தை சுமந்து வாழ்கின்றோம். அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் நான் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் சமூகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க நான் ஒரு போதும் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது நஸீர் அவர்களின் வெற்றிக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அன்வர், றியாஸ் இஸ்மாயில்)

No comments:
Post a Comment