எதிர்த்தரப்பினருக்கு சாதகமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது - தேர்தல்கள் ஏதும் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 9, 2020

எதிர்த்தரப்பினருக்கு சாதகமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது - தேர்தல்கள் ஏதும் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை

(இரஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்கு ஏற்படும் காலதாமதம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் காரணிகள் பொருத்தமற்றதாகும். எதிர்த்தரப்பினருக்கு சாதகமாகவே ஆணைக்குழு செயற்படுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபித்த காலத்தில் இருந்து தேர்தல்கள் ஏதும் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாட்டை தோற்றுவிப்பதாகவும், பொருத்தமற்றதாகவும் உள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாகவே ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள் என்பது பல சம்பங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸதாபிக்கப்பட்ட காலத்தில் இருந்து எந்த தேர்தலும் உரிய காலத்தில் இடம்பெறவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 3 வருட காலம் பிற்போட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாகவே நடத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையிலும், புதிய தேர்தல் முறையிலும் நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றில் நிலையான அரசாங்கம் தோற்றம் பெறும் என எதிர்பார்த்தோம். கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்த்தரப்பினர் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். 

பொது காரணிகளை கொண்டு பொதுத் தேர்தல் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியும் ஆணைக்குழு பொறுப்பற்ற விதமாகவும், மந்தகரமாகவும் செயற்படுகிறது.

தொடர்ந்து பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு இடமளிக்க முடியாது வெகுவிரைவில் தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவது மாத்திரமே ஆணைக்குழுவின் செயற்பாடு எவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment