கொலை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகநபரான 'கொனா கோவிலே ராஜா' என அழைக்கப்படும் ராஜா விமலதர்ம என்பவர் பொலிசாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இன்று (07) அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக சென்ற வேளையில், இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத குழுவினரால், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை, சொய்சாபுர பிரதேசத்திலுள்ள உணவமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதான பாதாள குழுவின் தலைவர் என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மினுவாங்கொடை, பல்லபான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, களனி பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் மற்றும் பேலியகொட பிரிவு அதிகாரிகள் குழுவினால் குறித்த வீட்டை சுற்றி வளைத்து சந்தேகநபரை கைது செய்வதற்குச் சென்ற வேளையில், பொலிஸார் மீது சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த 50 வயது சந்தேகநபர், திவுலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகநபர் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் பிரவ்னின் வகை கைத்துப்பாக்கியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேகநபர் இவர் என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர், திஸ்ஹதேவத்த, ஜயசுமனாராம மாவத்தை, இரத்மலானை எனும் முகவரியில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டவர் என்பதோடு, பல்லபான, திவுலபிட்டி பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரியவந்தள்ளது.
சடலம் தற்போது, திவுலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.கே. இந்திக டி சில்வாவின் தலைமையின் கீழ், மினுவாங்கொடை பொலிஸார், பேலியகொட குற்றப் பிரிவு மற்றும் களனி குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment