(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்குமான ஜனாதிபதி செயலணி அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட அழுத்தத்திற்கு உட்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய தேசிய கட்சி, இந்த செயலணி மக்களிகளின் ஜனநாயக உரிமை, கருத்து கூறுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இம்மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2178/18 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்குமான ஜனாதிபதி செயலணி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணியின் நோக்கம் நாட்டினுள் இடம்பெறும் சட்ட விரோத போதைப் பொருள் வியாபாரம் மற்றும் போதைப் பொருள் பாவனை என்பவற்றை ஒழிப்பதற்காக சிறுவர்கள் அடங்கிய சமூகத்தை பாதுகாப்பதோடு ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள ஜனாதிபதி செயலணிக்கு முழுமையாக இராணுவத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளமையானது பாரிய பிரச்சினையாகும்.
பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களாகவோ அல்லது தற்போது அவற்றில் சேவையாற்றுபவர்களாவோ தான் உள்ளனர். இது முழுமையாக இராணுவமயப்படுத்தலாகும்.
இந்த ஜனாதிபதி செயலணி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், குடிவரவு குடியகழ்வு திணைக்கள ஆணையாளர் நாயகம், சட்டமா அதிபர், சுகாதார அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளிகள் ஆலோசனைக்கு அமைய அவ்வாறான உறுப்பினர்களை உள்ளடக்காமையும் பாரிய பிரச்சினையாகும்.
தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு செயற்படுகின்றமை அவர் ஜனநாயகத்தை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றமையை வெளிக்காட்டுகிறது. அத்தோடு இந்த செயலணியானது மக்களிகளின் ஜனநாயக உரிமை, கருத்து கூறுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட இந்த ஜனாதிபதி செயலணி மூலம் கேள்விக்குட்படக்கூடும் என்பதோடு, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப அவர்கள் செயற்படுவார்களாயின் சட்டத்தை மீறி செயற்படும் சிலரது சட்ட விரோத செயற்பாடுகளே அதிகரிக்கும். இவ்வாறானவர்களால் சட்ட விரோதமாக செயற்படுபவர்களை சமூகத்திலிருந்து இல்லாமலாக்க முடியாது.
அவ்வாறு ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி செயலணிகளின் உள்ளடக்கம் மற்றும் அதிகார திருத்தங்கள் என்பவற்றை சரியான முறையில் வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment