ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அதன் சகோதர கட்சிகள் ஒன்றிணைந்து வெற்றியீட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பலமான அரசாங்கமொன்றை அமைக்க இடமளிக்கவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் திகதிக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை மனு விசாரணை இன்றி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பதற்றம் அடைந்துள்ளனர். தேர்தலில் இருந்து தப்பித்துக் கொள்ள எதிர்க்கட்சியினர் உபயோகித்த கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் அவர்கள் தமது உறுப்பினர் பதவிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அதன் சகோதர கட்சிகள் ஒன்றிணைந்து வெற்றியீட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு சக்தி வாய்ந்த அரசாங்கமொன்றை அமைக்க இடமளிக்கவுள்ளோம்.
எதிர்க்கட்சியினர் எதைச் சொன்னாலும் அவர்கள் படுதோல்வியடைவர். இரண்டாக பிளவுபட்டிருக்கும் அவர்கள் ஒன்றுபட்டாலும் தோல்வி அடைவது நிச்சயம்.
நாட்டு மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கவே தேர்தல் இடம்பெறுகின்றது. எமது ஆட்சிக் காலத்தில் எவ்வகையான பிரச்சினைகள் தோன்றினாலும் உரிய காலத்தில் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை பாதுகாத்தோம்.
கடந்த காலங்களில் தேர்தலை பிற்போட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பது தேர்தலை பிற்போட செய்வதற்கு அல்ல. தேர்தலை நடத்த வேண்டும் என்று கூற வேண்டும்.
தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கம்தான் பயப்பட வேண்டும். மக்கள் எவ்வகையான முடிவை எடுப்பார்கள் என்று அரசாங்கம் என்ற வகையில் முன்செல்ல எவ்வித பயமும் எமக்கில்லை. நாம் மக்களுக்காக சேவை செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
வெலிகம நிருபர்

No comments:
Post a Comment