(ஆர்.யசி)
பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் கருத்துக்கள் குறித்து என்னால் எதனையும் கூற முடியாது. அவர் தமிழ் மொழியில் கருத்துகளை முன்வைத்துள்ள காரணத்தினால் என்னால் எதனையும் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. எனவே முறையாக மொழி பெயர்த்து தாருங்கள் என்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
எந்தவொரு விடயம் குறித்தும் கலந்துரையாடி கருத்திக்களை பகிர்ந்துகொண்டால் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும் எனவும் அவர் கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக இயங்கிக் கொண்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை முன்வைப்பது ஆணைக்குழுவின் சுயாதீனத்தில் கேள்வியை எழுப்புகின்றது. ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் நீங்கள் இதனை எவ்வாறு கருதுகின்றீர்கள் என இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த விடயம் குறித்து என்னால் முழுமையான விடயங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. எனினும் இதில் இரண்டு காரணிகளை என்னால் கூற முடியும்.
முதலாவது அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது தமிழ் மொழியில், துரதிஷ்டவசமாக எனக்கு தமிழ் மொழியை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே அந்த கருத்தை முறையாக எனக்கு விளங்கும் மொழியில் மொழி பெயர்ப்பு செய்து எனது கரங்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் என்னால் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.
இரண்டாவது காரணி என்னவெனில் அவர் கூறிய விடயங்கள் தொடர்பில் நான் அவருடன் கலந்துரையாடாது பதில் கூறினால் அவருக்கும், என்னிடம் பதிலை எதிர்பார்க்கும் மக்களுக்கும் அதிருப்தியே ஏற்படும்.
அவரது கருத்தை நான் இன்றுதான் அறிந்துகொண்டேன். ஆகவே இன்னமும் நாம் அது குறித்து பேசவில்லை. எனினும் எந்தவொரு விடயம் குறித்தும் கலந்துரையாடி கருத்திக்களை பகிர்ந்துகொண்டால் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.
மாறாக ஒரு கருத்திற்கான விமர்சனங்களையும் கருத்தியல் தாக்குதல்களை முன்வைப்பதால் அந்த விடயம் மேலும் முரண்படுமே தவிர தீர்வினை எதிர்பார்க்க முடியாது. ஆகவே நான் பேச்சுவார்த்தையின் மூலமாக கையாளவே நினைக்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment