இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். 

கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம், இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்து வருகிறது. அமெரிக்கா தவிர பல்வேறு நாடுகளிலும் இந்த போராட்டம் விரிவடைந்துள்ளது.

அவ்வகையில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். 

பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜஸ்டின் ட்ரூடோ பேரணியில் இணைந்து நடந்து வந்தார். இது அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்தது. அவருடன் சோமாலிய வம்சாவளி அமைச்சரான அகமது உசேனும் பேரணியில் பங்கேற்றார்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மௌன அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டக்காரர்கள் ஒன்று கூட வேண்டாம் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் எச்சரித்திருந்த நிலையில், பேரணியில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் டொரன்டோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற பேரணி நடைபெற்றது.

No comments:

Post a Comment