அரசுக்கு மூன்றில் இரண்டு ஆதரவு, எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்ய முடியாது ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டிய விடயம் என்கிறார் செல்வம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 21, 2020

அரசுக்கு மூன்றில் இரண்டு ஆதரவு, எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்ய முடியாது ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டிய விடயம் என்கிறார் செல்வம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்து வரும் விடயமானது அவரது சொந்தக் கருத்தே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அமைந்து விடாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு பிரதான கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு அதில் எமது டெலோ அமைப்பை கொண்ட கட்சிக்கு அவரது கூற்றில் முழுமையான உடன்பாடு கிடையாது. 

எடுத்த எடுப்பிலேயே அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு ஆதரவு தருகிறோம் என்று எம்மால் கூறிவிட முடியாது. தமிழ் மக்கள் பட்ட வலிகளை தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நாங்கள் இலகுவாக தாரைவார்த்து விட முடியாது. 

அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டை வழங்க வேண்டுமானால் நாம் ஆழமான பேச்சுவார்த்தைகளை அரசாங்கத்துடன் நடத்தி அதற்கான உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை சுமந்திரனும் அல்லது சம்பந்தன் ஐயாவும் தனித்துச் செய்ய முடியாது. 

அதனை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தமிழ் மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு செய்ய வேண்டும். கடந்த அரசாங்கத்தில் நாம் விட்ட தவறுகளை மீட்டிப் பார்க்க வேண்டும். கடந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றியதை நினைத்து பார்க்க வேண்டும். 

எனவே இந்த முன் அனுபவங்களை கொண்டு இனியும் எவரிடமும் மாறாத வகையில் நமது எதிர்கால பயணத்தை தொடர வேண்டும். எனவே மூன்றிலிரண்டு என்பது சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு விடயமாகும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முனையக் கூடாது. எமக்கு எமது மக்களுக்கு நல்லது நடக்குமாயின் ஆதரவு வழங்குவதில் எந்தவிதமான தப்பும் இல்லை. 

ஆனால் அதனை சரியாக சரியான அணுகுமுறையுடன் செய்ய வேண்டும் என்பதே எமது கருத்தாகும். கடந்த காலங்களில் நாங்கள் கூட்டாக எடுத்த முடிவுகளாலேயே ஏமாற்றப்பட்ட வரலாறுகளை காண்கின்றோம். அதனால் தனித்து எதனையும் செய்ய வேண்டாம் என்பதே எமது கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment