களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஆளணிப் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி நேற்று புதன்கிழமை (24.06.2020) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரப்பட்டது.
நலன்புரிச் சங்கத்தினரும், நோயாளிகளும், சமூக நல விரும்பிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.
எமது வைத்தியர்களைக் காப்பாற்றுவோம், வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டால் நோயாளருக்கான சிகிச்சை தாமதம், வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரசியலைத் திணிக்காதே,” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய இந்த வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
2012ஆம் ஆண்டிலிருந்தே இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டிருந்தாலும் இங்கு ஆளணிப்பற்றாக்குறை நிலவி வருகின்றது. 51 வைத்தியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 14 வைத்தியர்கள் மாத்திரம் கடமை புரிகின்றனர்.
இரண்டு விசேட வைத்தியர்கள் மாத்திரமே உள்ளார்கள், இங்கு கடமைக்காக வரும் வைத்தியர்கள் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்றுச் செல்வது நோயாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தருவதாக தெரிவிக்கின்றனர்,
இங்கு சிகிச்சையை எதிர்பார்த்து வரும் மக்கள் வைத்திய ஆளணிப் பற்றாக்குறை காரணமாக மட்டக்களப்பு, கல்முனை போன்ற தூர இடங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆளணிப்பற்றாக்குறை உடனடியாக நிவர்த்திக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(பெரியபோரதீவு நிருபர்)
No comments:
Post a Comment