மட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று ஆறு நாட்களின் பின்னர், 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - கல்லடியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், கல்லடியைச் சேர்ந்த ஒருவரும் அவரின் மகனும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மறுதினமே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சிறுவன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 3 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், CT Scan எடுப்பதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனமே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமென சிறுவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் வினவியபோது, சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக, அவரின் பெற்றோர்களால் இதுவரை தனக்கு முறைப்பாடு செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
சிறுவனின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.
சிறுவனின் பிரேதப் பரிசோதனைக்கான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை இதுவரை தனக்கு கிடைக்கவில்லை எனவும், அறிக்கை கிடைத்த பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று காலை நடைபெற்றன. நாவலடி இந்து மயானத்தில் சிறுவனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment