பக்கச்சார்பாக செயற்படும் உறுப்பினர் உள்ள ஆணைக்குழுவினூடாக எவ்வாறு சுயாதீனமான தேர்தலை எதிர்பார்க்க முடியும் என ஜனாதிபதியின் சட்ட ஆலோசகரும் பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பேராசிரியர் ஹூல் இதற்கு முன்னரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும் அரசாங்கம் பற்றியும் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக கூறிய அவர் அரசியல் செய்வதாக இருந்தால் பேராசிரியர் ஹூல் வெளியில் வந்து அதனை செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் உண்மையான சுயாதீனத்துடன் ஆணைக்குழுக்கள் செயற்படும் வகையில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்கக் கூடாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹூல் தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் அரசியல் செய்வதை ஏற்க முடியாது. அவர் அரசியல் செய்வதாக இருந்தால் தமது பதவியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட எந்த தடையும் கிடையாது.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் அரசியல் ரீதியான கருத்துக்களை இதற்கு முன்னரும் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து கட்டுரைகள் எழுதியிருந்ததோடு ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்திருந்தார்.
தற்பொழுது ஊடகங்கள் பொதுஜன பெரமுனவிற்கு சார்பாக செயற்படுவதாக கூறியுள்ளார்.ஆனால் ஊடக நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.பொதுஜன பெரமுன தான் போட்டியிடுகிறது. பொதுஜன பெரமுனவை ஆதரிக்க வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
வெளிப்படையாக பொதுஜன பெரமுனவிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார். எதிர்காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களை உண்மையாக சுயாதீனமாக செயற்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
தற்போதைய நிலையில் இவ்வாறு பக்கசார்பாக செயற்படுவோரை மாற்ற முடியாது. அவர்களாக விலக வேண்டும். 19 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பில் தற்பொழுது ஆராயப்படுகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசில் தேவையான மாற்றங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஷம்ஸ் பாஹிம்

No comments:
Post a Comment