திகாம்பரத்திற்கும், திலகராஜாவுக்கும் முரண்பாடு சமரச முயற்சி தோல்வி? - அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

திகாம்பரத்திற்கும், திலகராஜாவுக்கும் முரண்பாடு சமரச முயற்சி தோல்வி? - அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்

தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அதன் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜாவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதைப் போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் உலாவருகின்றன.

தொழிலாளர் தேசிய முன்னணியை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு காலத்துக்குக் காலம் கட்டுக்கதைகளாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஒரு குழு இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இணையத்தில் வருகிறது என்பதற்காக அதில் வெளிவரும் அநாமதேய செய்திகளை நம்பி குழப்பமடையாமல் கட்சி செயற்பாட்டாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அரசியல் கட்சிகள் போன்ற பொது அமைப்புகள் சமூக நோக்கத்துக்காக தனிநபர்கள் பலரது ஒன்றிணைப்பில் இயங்கி வருகின்றன. தொழிலாளர் தேசிய முன்னணியும் அத்தகைய ஓர் அமைப்பாகும். எமது கட்சி ஜனநாயக பண்புகளை மதிக்கும் அமைப்பு. அதற்கென கட்டமைப்பு உள்ளது. அதில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அத்தகைய கருத்துக்கள் வெளிப்படும்போது அவை வாத, விவாதங்களுக்கு உட்பட்டு தீர்வு காண்பது ஜனநாயகப் பண்பு ஆகும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள் குறித்த விபரங்கள் பேசித்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜாவுக்கு தேசியப்பட்டியலில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொடுக்கும் முழுப் பொறுப்பையும் தலைவர் என்ற வகையில் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

ஆனாலும், இது குறித்த எதிர்மறையான செய்திகளை இணையத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு ஒரு குழு திட்டமிட்ட அடிப்படையில் அநாமதேய செய்திகளை வெளியிட்டு வருவது குறித்து நான் அவதானித்து வருகிறேன். 

எமது கட்சியில் எடுக்கப்படும் தீர்மானங்களை நாம் உத்தியோகபூர்வமாக வெளியிடும் செய்திகளுக்கு மாறாக கட்சியில் பெயர் குறிப்பிடப்படும் பதவி நிலையில் உள்ள எவரது பெயரையும் குறிப்பிடாது வெளிவரும் எதிர்மறையான செய்திகளையும், திட்டமிட்டுப் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளையும், அத்தகைய செய்தித் தளங்களையும் புறக்கணித்து விட்டு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கே. சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment