ராஜபக்சக்களின் அரசாங்கத்திற்கு உற்சாகத்தை வழங்கும் வகையில் சஜித் தரப்பு செயற்படுகிறது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

ராஜபக்சக்களின் அரசாங்கத்திற்கு உற்சாகத்தை வழங்கும் வகையில் சஜித் தரப்பு செயற்படுகிறது

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தலில் முழுமையாக ஸ்திரமற்றுப் போயுள்ள ராஜபக்சக்களின் அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி உற்சாகத்தை வழங்கும் வகையில் செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கொழும்பு - கொள்ளுபிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கு இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வேறு நிலைப்பாடு காணப்படுகின்றமையே காரணமாகும் என்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமின்றி மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பனவும் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எவற்றையும் தாக்கல் செய்யவில்லை என்பதையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐவர் கொண்ட நீதியர் குழாம் ஏகமனதாக தீர்ப்பினை அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்து தீர்ப்பளித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்கூறியவாறு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்யும் விவகாரத்தில் அதன் சட்ட பின்னணியை ஆராய்ந்த பின்னரே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க இதன் போது மேலும் தெரிவித்தார்.

கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தன் பின்னர் தனது கருத்தைக் கூறிய கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்த அனைத்து சிவில் அமைப்புக்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பவை என்பதை சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் பரவலில் முழுமையாக ஸ்திரமற்றுப் போயுள்ள ராஜபக்சக்களின் அரசாங்கத்திற்கு இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி உற்சாகத்தை வழங்கும் வகையில் செயற்படுவதாகவும் இதன்போது ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பிற்குள் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ரவி கருணாநாயக்க இதன் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment